439
நெடுந்தீவு பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தினால் , யாழ்ப்பாணத்தில் இருந்து நெடுந்தீவு செல்ல சென்ற மக்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர். நெடுந்தீவு பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் இடம்பெறுகின்ற நிலையில் கூட்டத்தில் பங்கேற்பவர்களின் வசதிக்கேற்ப வடதாரகை பொது போக்குவரத்து நேர ஒழுங்கு மாற்றப்பட்டது.
குறிக்கட்டுவானிலிருந்து நெடுந்தீவு நோக்கி காலை 8 மணிக்கு பயணமாகும் வடதாரகை பயணிகள் படகு இன்றையதினம், ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திற்கு செல்வோருக்காக குறிக்கட்டுவானிலிருந்து நெடுந்தீவு நோக்கி காலை 7.30 மணிக்கு சேவையில் ஈடுபட்டது.
அதில் அரச அதிகாரிகள், நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் என பலரும் பயணத்தை மேற்கொண்ட நிலையில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடற்படையினரின் விசேட படகில் பயணித்தார்.வழமையான பயண நேரமான 8 மணிக்கு வடதாரகை பயணிகள் படகில் பயணிக்க வந்தவர்கள் நீண்ட நேரம் காத்திருந்ததை அவதானிக்க முடிந்தது.
இதன்போது அங்கு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த முன்னாள் பிரதேச சபை உறுப்பினரொருவர், பொதுமக்களை நடுத்தெருவில் அந்தரிக்க வைத்துவிட்டு யாருக்கு இவர்கள் கூட்டம் நடத்துகிறார்கள் என கேள்வி எழுப்பினார்.
சுற்றுலா தலமான நெடுந்தீவுக்கு செல்வதற்காக வந்த நிலையில் போக்குவரத்து இல்லாமை கவலையளிப்பதாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சிலர் கருத்து தெரிவித்தனர். பொறுப்பானவர்களின் பொறுப்பற்றதனத்தால் வயோதிபர்கள், சிறுவர்கள் என பலரும் ஏமாற்றத்துடன் அடுத்த படகு சேவைக்காக காத்திருந்தனர்.
Spread the love