“ஓகஸ்ட் 23” இந்தியாவின் “தேசிய விண்வெளி தினம்” என இந்திய பிரதமர் நரேந்திர மோடி உத்தியோகபூர்வ அறிவித்துள்ளார்.
பெங்களூரில் உள்ள இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் தலைமையகத்திற்கு சென்று உரையாற்றிய போதே அவர் இதனை அறிவித்துள்ளார்.
BRICS மாநாட்டில் பங்கேற்பதற்காக தென்னாப்பிரிக்கா சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி, பின்னர் கிரேக்கத்திற்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு, இன்று இந்தியா திரும்பியுள்ளார்.
சந்திரயான்-3 வெற்றிக்கு காரணமான குழுவினரை சந்திப்பதற்காக அவர் அங்கு சென்றிருந்தார்.
இதேவேளை, நிலவில் பிரக்யான் ரோவர் தரையிறங்கிய இடத்திற்கு Shiv Shakti Point என பெயர் சூட்டப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
இதன்போது, பிரதமர் மோடிக்கு லாண்டர் எடுத்த படங்களை, திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் பரிசாக வழங்கினார்.
இதனிடையே, நிலவின் தென் துருவத்தில் உள்ள நீர் நிலைகள் பற்றிய தகவல்களை சேகரிப்பதற்காக பிரக்யான் ரோவர் சந்திரனின் மேற்பரப்பில் பயணிக்கத் தொடங்கியுள்ளது.
சூரிய சக்தியில் இயங்கும் ரோவர் அதன் செயல்திறன் குறைவதற்கு முன் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு தரவுகளை அனுப்பவுள்ளது.