குருந்தூர் மலை விவகாரத்தில் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் ஏற்கனவே வழங்கிய கட்டளைகளை மதிக்காது நிர்மானப் பணிகள் இடம்பெற்றுள்ளன எனவும், தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் முல்லைத்தீவு நீதிமன்றக் கட்டளைகளை மதித்து நடைமுறைப்படுத்தவில்லை எனவும் முல்லைத்தீவு நீதின்று கட்டளை வழங்கியுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை பகுதியிலே அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரை உள்ளிட்ட கட்டுமான பணிகள் தொடர்பிலான வழக்கின் கட்டளைக்காக நேற்று (31.08.23) திகதியிடப்பட்டிருந்தது.
அந்த வகையிலே நேற்று (31.08.23) குருந்தூர் மலை தொடர்பிலான AR/673/18 என்கின்ற வழக்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்றது.
முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி. சரவணராஜா முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது ஆலய நிர்வாகம் சார்பிலே முல்லைத்தீவு மாவட்டத்தின் சட்டத்தரணிகள் அனைவரும் முன்னிலையாகி இருந்ததோடு ஆலய நிர்வாகம் சார்பாக நிர்வாகிகள் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கஜேந்திரன், சிவஞானம் சிறீதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், எம்.ஏ. சுமந்திரன், முன்னாள் மாகாண சபை விவசாய அமைச்சர் கந்தையா சிவநேசன் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதேவேளையிலே தொல்லியல் திணைக்களம் சார்பாக தொல்லியல் திணைக்களத்தின் வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களின் உதவி பணிப்பாளர் மற்றும் தொல்லியல் திணைக்கள சட்டத்தரணிகள் காவற்துறையினர் நீதிமன்றத்தில் முன்னிலையாகி இருந்தனர்.
இதன்போது கட்டளையை வழங்கிய முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி குருந்தூர் மலை விவகாரத்தில் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் ஏற்கனவே வழங்கிய கட்டளைகளை மதிக்காது நிர்மானப் பணிகள் இடம்பெற்றுள்ளன எனவும் தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் முல்லைத்தீவு நீதிமன்றக் கட்டளைகளை மதித்து நடைமுறைப்படுத்தவில்லை எனவும் கட்டளை வழங்கியுள்ளார்