Home இலங்கை சனல் நாலு யாருக்கு நன்மை செய்கின்றது? நிலாந்தன்.

சனல் நாலு யாருக்கு நன்மை செய்கின்றது? நிலாந்தன்.

by admin

 

சனல் நாலு மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறது.முன்னைய வீடியோவைப் போலவே,இதுவும் ஜெனீவா கூட்டத்தொடரை முன்னிட்டு வெளியிடப்பட்டிருக்கிறது.அதில் கூறப்பட்ட தகவல்கள் உண்மையாக இருந்தால்,இலங்கைத் தீவின் அரச கட்டமைப்பும் அதன் உபகரணங்களும் எந்தளவுக்கு நம்பகத்தன்மையற்றவை என்பதனை அது வெளிப்படுத்தியிருக்கிறது.அசாத் மௌலானா அந்த வீடியோவின் இறுதிப் பகுதியில் கூறுகிறார்…”அதிகாரத்துக்காக தமது சொந்த மக்களையே கொன்றிருக்கிறார்கள்” என்று.

அசாத் மௌலானா பிள்ளையானின் உதவியாளராக இருந்தவர்.அவருடைய தகப்பன் ஈ.பி.ஆர்.எல்எப். இயக்கத்தில் இருந்தவர்.சொந்தப் பெயர் மிகிலார்.இயக்கப் பெயர் கமலன்.தமிழகத்தில் அந்த இயக்கத்தின் தலைவர் பத்மநாபா கொல்லப்பட்டபோது அவரோடு கொல்லப்பட்டவர்.அசாத் மௌலானா சனல் நாலு வீடியோவில்,பிள்ளையானுக்கும் இலங்கை படைப் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளருக்கும் எதிராகச் சாட்சியமளித்துள்ளார்.

இதுதொடர்பில் அனைத்துலக விசாரணை தேவை என்று ஏற்கனவே கர்தினால் மல்கம் ரஞ்சித் கூறி வருகிறார். முஸ்லிம்களும் அவ்வாறான கோரிக்கையை ஏற்கனவே முன்வைத்து விட்டார்கள். இப்பொழுது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் அக்கோரிக்கையை முன்வைத்திருக்கின்றார்.அதாவது இலங்கைத்தீவின் மூன்று இனங்களும் வெவ்வேறு காரணங்களுக்காக அனைத்துலக விசாரணையைக் கேட்கின்றன.இலங்கைத்தீவின் உள்நாட்டு நீதி பரிபாலனக் கடடமைப்பு;,புலனாய்வுக் கட்டமைப்பு;ஆட்சிமுறைமை என்பவற்றின் தோல்வியை இது காட்டுகிறது?

ஆட்சியதிகாரத்தை கைப்பற்றுவதற்காக எந்தக் கொடிய செயலையும் செய்யலாம்;யாரையும் கருவியாகப் பயன்படுத்தலாம் என்று ஒரு மனப்பாங்கு எங்கிருந்து தோன்றியது? அதுவும் தேரவாத பௌத்த பண்பாட்டுக்குள் அது எங்கிருந்து தோன்றியது? இனமுரண்பாட்டின் நேரடி விளைவு அது.ஒரு இனத்தை அழிப்பதன் மூலம் அல்லது இனப்பகையைத் தூண்டுவதன் மூலம் ஆட்சியைக் கைப்பற்றலாம் என்ற சிங்கள பௌத்த அரசுப் பாரம்பரியத்தின் தொடர் விளைவுகளில் ஒன்றுதான் அது.முஸ்லிம்களுக்கு எதிராக சிங்கள பௌத்த உணர்வுகளைத் தூண்டி தனிச்சிங்கள பௌத்த வாக்குகளைத் திரட்டலாம் என்று நம்பியமை.

அந்த நம்பிக்கை பொய்க்கவில்லை. சிங்கள மக்கள் அந்தக் குடும்பத்துக்கு 2019இல் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்கினார்கள்.ஆனால் அதே சிங்கள மக்கள் அந்தக் குடும்பத்தை ஓட ஓட விரட்டினார்கள். கடந்த ஆண்டு அந்தக் குடும்பம் ராணுவ முகாம்களிலும் வெளிநாடுகளிலும் ஒளிக்க வேண்டியிருந்தது.ஆனால் இந்த ஆண்டு அவர்கள் ஒப்பீட்டளவில் தற்காப்பு நிலைக்கு வந்து விட்டார்கள். லிபரல் முகமூடி அணிந்த ரணில் விக்ரமசிங்கவின் மறைவில் அவர்கள் படிப்படியாகத் தற்காப்பு நிலையில் இருந்து தாக்கும் நிலைக்கு முன்னேறத் தொடங்கிவிட்டார்கள்.சனல் நாலு தொடர்பாக நாடாளுமன்றத்தில் ராஜபக்சகளின் கட்சிக்காரர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதிலிருந்து அதைத் தொகுத்துப் பார்க்கலாம்.

இவ்வாறு ராஜபக்சக்கள் தற்காப்பு நிலையில் இருந்து தாக்கும் நிலைக்கு முன்னேறுவதைத் தடுக்க வேண்டும் என்று மேற்கு நாடுகளும் விரும்பும்; பன்னாட்டு நாணய நிதியமும் விரும்பும்.அந்த விருப்பத்தை சனல் நாலு வீடியோ ஓரளவுக்கு நிறைவேற்றுமா? அந்த வீடியோவின் உடனடி விளைவாக ராஜபக்சக்களின் கீர்த்தி உலக அளவில் மேலும் கெடும். ராஜபக்சக்களின் அந்தஸ்து உலக அளவில் ஏற்கனவே கெட்டுப் போய்விட்டது. இப்பொழுது இந்த வீடியோ அதை மேலும் கெடுக்கும். ஆனால் அது அதன் எதிர்மறை விளைவாக உள்நாட்டில் அவர்களுக்கு ஆதரவைக் கூட்டக்கூடும். புலம்பெயர்ந்த புலிகள் அமைப்புகளும் வெள்ளைக்கார நாடுகளும் சேர்ந்து யுத்த வெற்றியை அபகரிக்கும் நோக்கத்தோடு உருவாக்கியதே அந்த வீடியோ என்று சொன்னால் அது சிங்கள பௌத்த கூட்டு உளவியலில் ஏதோ ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்.

மேலும், அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடக்கவிருக்கும் ஐநா கூட்டத் தொடரும் சிங்கள மக்கள் மத்தியில் மேற்குக்கு எதிரான உணர்வுகளை அதிகப்படுத்தும். செப்டம்பர் மாதத்திற்கு பின்னர்தான் ஜனாதிபதித் தேர்தல் வரும்.எனவே தேர்தலில் மேற்கு நாடுகளுக்கும் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகளுக்கும் எதிரான உணர்வலைகள் வாக்களிப்பில் தாக்கம் செலுத்தும்.இப்படிப் பார்த்தால் சனல் நாலு வெளியுலகில் ராஜபக்சக்களின் அந்தஸ்தை குறைத்திருக்கின்றது.அதேசமயம் உள்நாட்டில் அவர்களுக்கு அனுதாபத்தைப் பெருக்கக்கூடும்.

ஆனாலும் ராஜபக்சக்கள் அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் தேர்தலில் போட்டியிடும் மனோநிலையில் இல்லை என்றே தெரிகிறது.அவர்களுக்குத் தங்களை எப்படித் தற்காத்துக் கொள்வது என்று தெரியும். உலக அளவில் தங்களுடைய அந்தஸ்தை உயர்த்திக் கொள்ளும் வரை அவர்களுக்கு ஒரு பதிலி தேவை. ரணில் விக்கிரமசிங்க அதற்கு மிகப் பொருத்தமானவர். அவருக்குப் பின் பதுங்குவதன்மூலம் ராஜபக்சக்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தம்மை மேலும் ஸ்திரப்படுத்திக் கொள்ளலாம். தென்னிலங்கையில் தன்னெழுச்சிப் போராட்டங்கள் தோற்கடிக்கப்பட்டு,கிட்டத்தட்ட ஓராண்டு காலத்துக்குள், ராஜபக்ச குடும்பம் பதுங்கும் நிலையிலிருந்து தற்காப்பு நிலைக்கு முன்னேறியிருப்பது அதைத்தான் காட்டுகின்றது. எனவே தம்மை முழுமையாக பலப்படுத்திக் கொள்ளும்வரை அவர்கள் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் குதிப்பார்களா என்பது சந்தேகமே.

அவர்களுடைய கட்சியைச் சேர்ந்தவர்கள் ஜனாதிபதித் தேர்தலைக் குறித்து இடைக்கிடை வீறாப்பாகக் கருத்துக்களைத் தெரிவித்து வந்தாலும், ராஜபக்சக்கள் வெளிப்படையாக வாய் திறப்பதில்லை என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.அக்குடும்பத்தின் அடுத்த வாரிசாகக் கருதப்படும் நாமல் ராஜபக்ஸ தன்னை பலப்படுத்திக் கொள்ளும் வரையிலும் அவர்கள் பொறுத்திருப்பார்கள்.எனவே அடுத்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க அவர்களுடைய பதிலியாக முன்னிறுத்தப்படும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.ராஜபக்சக்கள் ரணிலுக்கு இடைஞ்சலாக மேலெழுவதைத் தடுக்க சனல் நாலு வீடியோ உதவக் கூடும்.

இதில் ஒரு வினோதமான அரசியல் சமன்பாடு உண்டு.அதன்படி ராஜபக்சங்களுக்கு எதிரானது ரணிலுக்குச் சாதகமானது.ஆனால் அடுத்த ஆண்டு ராஜபக்சகளின் பதிலியாகத்தான் ரணில் களமிறங்கக்கூடும். ஆயின்,அதில் அவருக்குக் கிடைக்கக்கூடிய வெற்றி யாருடைய வெற்றியாக இருக்கும்? அது அவருடைய சொந்த வெற்றியா அல்லது ராஜபக்சக்களின் வெற்றியா?

எதுவாயினும் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்சக்கள் களமிறங்குவதை குறிப்பிடத்தக்க அளவுக்கு அந்த வீடியோ தடுக்கக்கூடும்.அதே சமயம் அந்த வீடியோ தமிழ் அரசியலில் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தும்?

உடனடிக்கு அது கிழக்கில் பிள்ளையானுக்குப் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.எனினும், அங்கேயும்கூட பிள்ளையானுக்கு ஒரு சாதகமான இடம் உண்டு. ஒரு முஸ்லிம் அவரைக் காட்டி கொடுத்து விட்டார் என்பதைத் தமிழ் முஸ்லிம் உறவுகளைப் பாதிக்கும் விதத்தில் உருப்பெருக்கினால், அது கிழக்கில் முஸ்லிம்களுக்கு எதிரான தமிழ் உணர்வுகளுக்குத் தலைமை தாங்கத் தேவையான பிள்ளையானின் தகைமையை மேலும் அதிகப்படுத்தக்கூடும்.சீயோன் தேவாலயத்தில் கொத்தாகக் கொல்லப்பட்ட குழந்தைகளுக்கு யார் பொறுப்பேற்பார்கள்?

இது உள்நாட்டளவில்.அதேசமயம் அனைத்துலக அளவில் நீதிக்காகப் போராடும் தமிழ் அமைப்புகளுக்கு அந்த வீடியோ சாதகமானது.தமிழ் மக்களால் ஏற்கனவே குற்றஞ் சாட்டப்படும் ஒரு குடும்பத்தை அந்த வீடியோ மேலும் அனைத்துலக அளவில் அம்பலப்படுத்தியிருக்கிறது. இலங்கைத்தீவின் அரசுக் கட்டமைப்பை அது அபகீர்த்திக்கு உள்ளாக்கியிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்கக் கண்டம் ராஜபக்சங்களுக்கு ஆபத்தான ஒரு கண்டமாக மாறி விட்டது. அக்கண்டத்தில் உள்ள இரண்டு பெரிய நாடுகளான அமெரிக்காவும் கனடாவும் ராஜபக்சக்களுக்கு எதிராக நிர்ணயகரமான சில நகர்வுகளை முன்னெடுத்திருக்கின்றன.குறிப்பாக கனடா இரண்டு மூத்த ராஜபக்சங்களுக்கு எதிராகத் தடை விதித்திருக்கிறது.அவ்வாறு தடை விதிக்கப்பட்ட அதே காலப்பகுதியில்,கடந்த மார்ச் மாதம் அமெரிக்கா ஒரு சட்டத்தை நிறைவேற்றியது.போர்க் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்கும் அச்சட்டத்தின் பிரகாரம் இரண்டு மூத்த ராஜபக்சகளுக்கும் அமெரிக்காவில் நெருக்கடியுண்டு.தவிர,அமெரிக்காவும் கனடாவும் சில ராணுவ அதிகாரிகளுக்கு பயணத் தடை விதித்திருக்கின்றன.குறிப்பாக,இலங்கைத் தீவின் ராணுவத் தளபதி மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி ஆகியோருக்கு எதிராகத் தடைகள் உண்டு.இவற்றுடன் கனடா இனப்படுகொலை தொடர்பில் தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறது.

இவற்றுடன் கடந்த ஆண்டு ஐநா தீர்மானம் ஒன்றின் பிரகாரம் போர்க் குற்றங்கள் தொடர்பான சாட்சிகளையும் சான்றுகளையும் சேகரிப்பதற்கான அலுவலகம் ஒன்று இயங்கி வருகின்றது.அதில் சேகரிக்கப்படும் சான்றுகளும் சாட்சியங்களும் என்றைக்கோ ஒருநாள் இலங்கைக்கு எதிராகப் பயன்படுத்தப்படக் கூடியவை.

மேற்கண்ட நகர்வுகள் யாவும் மேற்கத்தியப் பரப்பில் நிகழ்ந்தவை. இவற்றுடன் அண்மையில் இந்தியாவில்,ராமேஸ்வரத்தில் வைத்து உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்த கருத்தையும் சேர்த்துக் கொள்ளலாம்.இலங்கைத்தீவில் இடம்பெற்றது ஒரு பெரிய மனிதப் படுகொலை அல்லது இனப்படுகொலை என்ற பொருள்பட அவர் பேசியிருந்தார்.

இந்த வரிசையில் கடந்த வாரம் சனல் நாலு வீடியோவும் வெளி வந்திருக்கிறது. மேற்கண்ட அனைத்து விடயங்களும் நீதிக்கான போராட்டத்தில் தமிழ் மக்களுக்குப் பலம் சேர்ப்பவை.இலங்கைத்தீவின் அரசியல் கலாச்சாரம் பொறுப்பு கூறும் பண்புடையது அல்ல என்பதை தமிழ் மக்கள் உலக சமூகத்தின் முன் நிரூபிப்பதற்கு அவை உதவும்.

 

Spread the love
 
 
      

Related News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More