தோட்டாக்களினால் பெற்றுக் கொள்ள முடியாதுபோன தமிழீழத்தை, 13 இன் ஊடாக பெற்றுக் கொள்வதே சிலரின் இலக்காகும் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி ஊடகப்பிரிவில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர்,
புலிகள் அமைப்பை பெரும்பாலும் அழித்துள்ளதாகவும். ஆனால், உண்மையில் புலி அமைப்பின் வாலை மட்டும்தான் அழித்துள்ளதாகவும் குறிப்பிட்டு்ளார்.
அதன் தலை உள்ளிட்ட ஏனைய பகுதிகள் ஐரோப்பிய நாடுகளில் இருந்து இன்னமும் செயற்பட்டுக் கொண்டே இருக்கின்றன. தமிழ் பிரிவினைவாத புலம் பெயர் அமைப்புக்கள், தங்களின் கனவை இன்னமும் விடவில்லை.
தோட்டாக்களினால் பெற்றுக் கொள்ள முடியாதுபோன தமிழீழத்தை, 13 இன் ஊடாக பெற்றுக் கொள்வதே இவர்களின் இலக்காகும்.
இதனாலேயே, தாம் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக ஜெனிவாவில் இவர்கள் குற்றஞ்சாட்டி வருகிறார்கள். அத்தோடு, வடக்கு கிழக்கிலுள்ள பௌத்த புராதன சின்னங்களை அழிக்கும் செயற்பாடுகளிலும் அவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
பயங்கரவாதத்தை கட்டமைப்பு ரீதியாக இல்லாதொழித்தாலும், அவர்களின் ஈழக் கனவு இன்னமும் இருப்பதனால், இலங்கைக்கு இன்னமும் அச்சுறுத்தலான சூழல் தொடர்ந்துக் கொண்டே இருக்கிறது.
இந்த நிலையில் மீண்டும், புலிகள் அமைப்பு தலைத்தூக்கி வருவதாக இந்தியாவிலிருந்து புலனாய்வுத் தகவல் ஒன்று கிடைத்துள்ளதாகவும், இதுதொடர்பாக இராணுவப் புலனாய்வுத் துறையினர், ஆராய்ந்து வருவதாகவும் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.