Home இலங்கை யாழில் வேகமாக பரவும் கண் நோய் -எச்சரிக்கை!

யாழில் வேகமாக பரவும் கண் நோய் -எச்சரிக்கை!

by admin
இலங்கையில் பரவி வரும் கண் நோய் தற்போது யாழ் மாவட்டத்திலும் வேகமாக பரவி வரும் நிலையில் பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை அறிவுத்தல்களை வழங்கியுள்ளது.   யாழ் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதிஸ்வரன் அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில் குறித்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
 ‘வேகமாக பரவிவரும் கண் நோயிலிருந்து (Viral Conjunctivitis) எம்மை பாதுகாப்போம்’ என்ற தலைப்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை கண் வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி. மு. மலரவன் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். இலங்கை முழுவதும் தற்சமயம் பரவுகின்ற கண்நோய் (Viral Conjunctivitis) கடந்த சில நாட்களாக யாழ் மாவட்டத்திலும் பரவ ஆரம்பித்துள்ளது.
அடினோ வைரசினால் (Abdeno Virus) பரவும் இந்நோய் சாதாரணமான கண் வருத்தம் போன்றதே. இக் கண் நோயானது 70 வீதமானவர்களுக்கு ஒரு கண்ணில் வந்தால் மற்றைய கண்ணிலும் வரும். வீட்டில் உள்ள ஒருவருக்கு இக்கண் நோய் வரும் பட்சத்தில் 25 வீதம் வீட்டிலுள்ள ஏனையவர்களுக்கும் பரவக்கூடிய சாத்தியம் உள்ளது.
 குறித்த கண் நோயானது நேரடி தொடுகை மூலம் பரவக்கூடியது என்பதனால் பாடசாலைகள், அலுவலகங்கள், மற்றும் பொதுச்சந்தைகள் போன்ற அதிகளவானவர்கள் கூடும் இடங்களில் பரம்பல் அதிகரிக்க வாய்ப்புள்ளது.  எனவே இந்நோயினைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை உடனடியாக தீவிரப்படுத்த வேண்டிய ஒரு அவசர தேவை உணரப்படுகின்றது.
  இந்நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளது என்பதனை இலகுவில் நாமே இனங் காணமுடியும். எவ்வாறெனில் இந்நோய் தாக்கத்திற்குள்ளான ஒருவருக்கு கண்கள் சிவந்து இளஞ்சிவப்பு (Pink Eyes) நிறத்தில் காணப்படும். ஒரு சிலருக்கு கண் கடிக்கும். கண்ணிலிருந்து தண்ணீர் வடியும். பெரும்பாலானவர்களுக்கு பூழை சாறாது. வெளிச்சத்தினை பார்ப்பதற்கு கஸ்டமாக இருக்கும். ஒருசிலருக்கு பூழை சாறலாம்.
 இந்நோயானது தானாகவே மாறக்கூடியது. பெரும்பாலும் இதற்கு சிகிச்சை எதுவும் தேவையற்றது. இந்நோய் அரும்பு காலமானது (ஒருவரிலிருந்து தொற்று ஏற்படும் காலம்) 24 மணித்தியாலங்கள் தொடக்கம் 72 மணித்தியாலங்கள் ஆகும். இந்நோய் தொற்று ஏற்பட்ட 75 தொடக்கம் 80 வீதமானவர்களுக்கு 05 தொடக்கம் 07 நாட்களுக்குள் (சுமார் ஒரு வார காலத்தில்) குணமடையும்.   எனினும் 25 வீதமானவர்களுக்கு 02 தொடக்கம் 04 வாரங்கள்( சுமார் ஒரு மாத காலம்) வரை நோய் நீடிக்கலாம்.
பொதுவாகவே வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெற தேவையில்லை. எனினும் ஒரு கிழமைக்கு மேலாக கண்நோய் தாக்கம் காணப்படுமாயின் அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கோ வைத்திய நிலையத்திற்கோ சென்றால் அங்குள்ள வைத்தியர்கள் உங்களைப் பரிசோதித்து மேலதிக சிகிச்சை தேவைப்படும் பட்சத்தில் மாத்திரம் கண் வைத்தியரிடம் சிபார்சு செய்வார்கள்.
 பொதுமக்கள் இக்கண்நோய் ஏற்பட்டால் வேறு பாதிப்புக்கள் ஏற்படும் எனவோ இது  கொவிட் தொற்றுப் போன்ற உயிராபத்தை ஏற்படுத்தும் என  அச்சப்படத் தேவையில்லை.  இதுவும் முன்னைய காலங்களில் வந்த சாதாரண கண்நோய் போன்றதே. எனினும் தற்போது தனிநபர் சுகாதாரத்தை பேணாத காரணத்தினால் இந்நோய் வேகமாக பரவுவதனால் பெரியளவில் மக்களால் விமர்சிக்கப்படுகிறது.
 இக்கண் நோயானது பெரும்பாலும் கண் சிகிச்சை நிலையங்களிலிருந்து தான் ஒருவருக்கு தொற்றக்கூடிய சாத்தியம் காணப்படும். பின்னர் அவர் பாடசாலைக்கோ அல்லது அலுவலகத்திற்கோ செல்லும் சந்தர்ப்பத்தில் இவரது நேரடி தொடுகை (Direct conduct) மூலம் மற்றவர்களுக்கும் பரவக்கூடும்.
  இந்நோயினைக் கட்டுப்படுத்துவது மிகவும் இலகுவானது. பின்வரும் சில சுகாதார நடைமுறைகளைக் கடுமையாகப் பின்பற்றுவதன் மூலம் இந்நோய்த் தாக்கத்தினை இருவார காலப்பகுதிக்குள் கட்டுப்படுத்த முடியும்.
 1. தொற்று ஏற்பட்ட (கண்நோய் ஏற்பட்ட) ஒருவர் பாடசாலைக்கோ அலுவலகத்திற்கோ செல்வதனை முற்றாக தவிர்த்து சாதாரண தனிமைப்படுத்தலில் (Isolation) அவசியம். கண் சிவப்பு மறைந்து கண்ணில் இருந்து நீர்வடிதல் முற்றாக குணமடைந்த பின்னரே (3 – 5 நாட்கள் வரை) பாடசாலைக்கோ அலுவலகத்திற்கோ செல்ல வேண்டும்.
 2. இந்நோய் தொற்றுக்குள்ளான ஒருவர் கண்ணில் இருந்து வரும் நீரை கைகளினால் தொட்ட பின்னர் கைகளைக் கழுவாது வேறு ஒருவரையோ ஒரு பொருளினையோ தொடுவதனை முற்றாக தவிர்த்தல் அவசியம்.
 3. கண்நோய் ஏற்பட்டவர்களோ அவர்களை பராமரிப்பவர்களோ அன்றி நோய் தொற்று ஏற்படாது முன்னெச்சரிக்கையாக சாதாரண பொது மக்களோ அடிக்கடி கைகளினைச் சவர்க்காரமிட்டு நன்றாக கழுவுதல் வேண்டும்.
 4. நோய் ஏற்பட்டவர்களும் சரி சாதாரன பொதுமக்களும் சரி எச்சந்தர்ப்பத்திலும் கண்களினைக் கசக்குவதனையோ கண்களை தேவையற்று தொடுவதனையோ முற்றாகத் தவிர்த்தல் வேண்டும்.
 5. கண்நோய் பாதிப்புக்குள்ளானவர் பாவித்த துவாய், தலையணை, உணவுத்தட்டுக்கள் தேநீர் குவளைகள் கட்டில் கதிரை என்பவற்றை பாவிப்பதனை முடிந்தவரை தவிர்த்தல் முடியாத சந்தர்ப்பங்களில் தொற்றுநீக்கி கொண்டு சுத்தம் செய்த பின்னர் பாவித்தல்.
 6. கண்களுக்கு லென்ஸ் பாவிப்பவர்கள் நோய் குணமடையும் வரை அதனைப் பாவிப்பதனைத் தவிர்த்தல் வேண்டும்.
 7. நீச்சல் தடாகத்திற்கு செல்வதனை தொற்றுக்குள்ளானவர்கள் முற்றிலும் தவிர்த்தல் அவசியம்.
 8. அடிக்கடி கைகளையும் முகத்தினையும் சவர்க்காரமிட்டு கழுவுவதுடன் குளித்து சுத்தமாக இருத்தல் வேண்டும்.
 9. கண்நோய் தாக்கம் ஏற்பட்டவர்கள் எந்த சந்தர்ப்பத்திலும் எந்தவொரு மருந்தினையும் கண்களுக்கு விடுவதனை முற்றிலும் தவிர்த்தல் அவசியம். கண் வைத்தியர் ஒருவரின் ஆலாசனையின்றி மருந்துகளை பாவிப்பதனை தவிர்த்தல் வேண்டும்.
 10. எனினும் பாதிப்புக்குள்ளான கண்களுக்கு குளிரான ஒத்தடம் (Cold compression) மற்றும் செயற்கை கண்ணீர் (Artificial Tears) பாவிக்க முடியும்.
 எனவே அனைவரும் யாழ் மாவட்டத்தில் இக்கண்நோயின் பரம்பலை இரண்டு மூன்று வாரங்களுக்குள் கட்டுப்படுத்த மேற்கூறிய சுகாதார அறிவுரைகளைப் பின்பற்றுவதன் மூலம்; தமது பங்களிப்பினை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். என்றுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More