முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு லட்சம் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற தென்னிலங்கையைச் சேர்ந்த பெரும்பான்மையினத்தவர்களை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் உள்ள சிற்றூழியர் பதவி வெற்றிடங்களுக்கு நியமிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடளாவிய ரீதியில் ஒரு லட்சம் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற ஆயிரத்து 139 பேர் நியமனத்துக்குத் தகுதி பெற்றவர்கள் எனப் பட்டியலிடப்பட்டுள்ள நிலையில், பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த 7 பேர் யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் உள்ள வெற்றிடங்களுக்கு நியமிக்கப்படவுள்ளனர்.
எதிர்வரும் 30ஆம் திகதிக்குள் இவர்களுக்கான நேர்காணல் மற்றும் ஆள்சேர்ப்பு நடவடிக்கைகளை முன்னுரிமை அடிப்படையில் நடாத்தி முடிக்குமாறு பலநோக்கு அபிவிருத்திச் செயலணித் திணைக்களப் பணிப்பாளரால் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
வடக்கு – கிழக்கு மாகாணங்களில் இருந்தும் ஒரு லட்சம் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற பலர் தொழில் வாய்ப்புக்காக விண்ணப்பத்திருக்கும் நிலையில், யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் உள்ள பதவி வெற்றிடங்களுக்கு பெரும்பான்மையினத்தைச் சேர்ந்தவர்களை நியமிக்க நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.