372
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களாலும் ஏனையோராலும் தமிழ்த் தேசியம் சார்ந்து ஜனநாயகரீதியில் முன்னெடுக்கப்படும் அனைத்து செயற்பாடுகளுக்கும் எமது ஆதரவு உண்டு என யாழ். பல்கலைகழக ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
அது தொடர்பில் ஊழியர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையிலையே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
யாழ் பல்கலைக்கழக மாணவர்களும் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்து, கடந்த ஞாயிறுக்கிழமை மட்டக்களப்பு, மயிலத்தமடு – மாதவனைப் பகுதி மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புக்கு எதிராகப் போராடிவரும் கால்நடைப் பண்ணையாளர்களுக்கு ஆதரவாக அமைதியான முறையில் ஜனநாயக ரீதியில் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.
அப்போராட்டம் எவ்வித குழப்பங்களும் இன்றி யாருக்கும் இடையூறுகளுமின்றி நடைபெற்று முடிந்த பின்னர் வீடு திரும்பிக்கொண்டிருந்த மாணவர்களை வந்தாறுமூலைப் பகுதியில் இடைமறித்து அவர்களில் 06 மாணவர்களை பொலிஸார் கைது செய்தமையானது ஒரு திட்டமிட்ட ஜனநாயக விரோதச் செயற்பாடு ஆகும்.
இச் செயற்பாடு ஜனநாயக ரீதியில் போராடும் மாணவர்களினதும் ஏனையவர்களினதும் செயற்பாடுகளை அச்சுறுத்தும், அரச படைகள் மூலம் அடக்கும் நடவடிக்கையாகவே நாம் பார்க்கின்றோம். இதனை நாம் வன்மையாகக் கண்டிப்பதோடு, இவ்வாறான செயற்பாடுகளை அரசாங்கம் எதிர்காலத்தில் முன்னெடுக்கக்கூடாது என கோருவதோடு, கைதுசெய்யப்பட்டு வழக்குப்பதியப்பட்ட மாணவர்கள் வழக்குகளிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்றும் வேண்டி நிற்கின்றோம்.
பேரினவாத அரசாங்கத்தின் துணையோடு தமிழ்மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள், அவர்களது மரபு ரீதியான வாழிடங்கள் மீதான ஆக்கிரமிப்புக்கள், மொழி, கலாசார அழிப்புக்கள் என்பவற்றின் வாயிலாக தமிழ்மக்கள் இனவழிப்பு செய்யப்பட்டபோது அவற்றிற்கு எதிராக போராடி தம் வாழ்வையே அர்ப்பணித்து தமிழர்களைக் காத்துநின்ற உத்தமர்களை “பாசிசவாதிகள்” என்று எவரும் கூறவும் முடியாது, அதனை தமிழர்கள் யாரும் ஏற்கவும் மாட்டார்கள் என்பதனை கூறுகின்றோம்.
பொருளாதார நெருக்கடி, ஜனநாய நெருக்கடி என பல நெருக்கடிகளை நாட்டுமக்கள் எதிர்நோக்கும் இன்றைய காலச் சூழலில் நியாயத்திற்காகவும், உரிமைக்காகவும் போராடுபவர்களையும் சமூகச் செயற்பாட்டாளர்களையும், தொழிற்சங்கவாதிகளையும், மக்களையும் பாசிச செயற்பாடுகளின் மூலம், அரசாங்கம் அடக்கி ஒடுக்கி அடிபணியவைக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்துவரும் நிலையில் நாம் எமக்குள்ளே பிளவுபட்டு நிற்காது பல்கலைக்கழக சமூகமாக ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியமாகும் என்பதனை பல்கலைக்கழக சமூகத்தில் ஒரு அங்கம் என்ற ரீதியில் வலியுறுத்தி நிற்கின்றோம்.
அதே நேரத்தில் பல்கலைக்கழக மாணவர்களாலும் ஏனையோராலும் தமிழ்த் தேசியம் சார்ந்து ஜனநாயகரீதியில் முன்னெடுக்கப்படும் அனைத்து செயற்பாடுகளுக்கும் எமது ஆதரவு உண்டு என்பதோடு அச்செயற்பாடுகளில் அவர்களுடன் இணைந்து நிற்போம் எனவும் தெரிவித்து நிற்கின்றோம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Spread the love