475
யாழ்ப்பாண நீதிமன்ற கட்டட தொகுதிக்கு கல் வீசிய சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகளில் இருந்து தான் விலகி கொள்வதாக யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட நிலையில் அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினா் சந்தேகநபர்களை கைது செய்து 21ஆம் திகதி யாழ்.நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் , நீதிமன்ற சூழலில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதுடன், பலரும் கூடி இருந்தனர்.
அந்நிலையில் போராட்டம் வன்முறையாக உருமாறி நீதிமன்ற கட்டட தொகுதி மீது கல் வீச்சு இடம்பெற்றது. தொடர்ந்து நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தி வைக்கபப்ட்டு இருந்த சட்டத்தரணிகளின் வாகனங்கள் , சிறைச்சாலை வாகனம் , நீதிமன்றுக்கு அருகில் இருக்கும் சுப்பிரமணிய பூங்கா உடைமைகள் , யாழ்ப்பாண காவல்நிலையத்திற்கு முன்பாக இருந்த பொலிஸ் காவலரண் என்பவை சேதமாக்கப்பட்டன
இவை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினா் சுமார் 300 கும் மேற்பட்டவர்களை கைது செய்து , நீதிமன்ற கட்டட தொகுதிக்கு கல் வீசியமை , சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை , பொலிஸ் நிலையம் மீது கல்வீசியமை ஆகிய மூன்று குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்கு தொடர்ந்து சந்தேகநபர்களை மன்றில் முற்படுத்தி, வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
அந்நிலையில் நீதிமன்ற கட்டட தொகுதிக்கு கல்வீசிய வழக்கு விசாரணை சட்டமா அதிபர் திணைக்களத்தால் மேல் யாழ்.மேல் நீதிமன்றில் பாரப்படுத்தப்பட்டதை அடுத்து , மேல் நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் நடைபெற்று வந்தன.
இந்நிலையில் குறித்த வழக்கு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதியாக தற்போது கடமையேற்று இருக்கும் நீதிபதி டீ. சூசைதாசன் முன்னிலையில் எடுத்து கொள்ளப்பட்ட போது , தனது தனிப்பட்ட காரணங்களால் இந்த வழக்கு விசாரணைகளில் இருந்து தான் விலகி கொள்வதாக தெரிவித்து விலகி கொண்டுள்ளார். இது குறித்த நீதிமன்ற பதிவாளரால் , பிரதம நீதியரசருக்கு அறிவிக்கப்பட்டு , புதிய நீதிபதி ஒருவர் குறித்த வழக்கு விசாரணைகளை முன்னெடுப்பார்.
அதேவேளை சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை மற்றும் காவல் நிலையம் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகளை யாழ்.நீதவான் நீதிமன்றில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
Spread the love