அமெரிக்காவில் வாழும் காலிஸ்தான் ஆதரவாளர் ஒருவரைக் கொலை செய்ய இந்தியா சதித்திட்டம் தீட்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு இந்தியா பதிலளித்துள்ளது.
குற்றவாளிகள் மற்றும் பயங்கரவாதிகள் உட்பட சிலரைப் பற்றிய தகவல்களை அமெரிக்கா பகிர்ந்திருக்கிறது. இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது, என இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, பிரிட்டிஷ் செய்தித்தாளான ‘பைனான்சியல் டைம்ஸ்’ ஆதாரங்களை மேற்கோள் காட்டி ஒரு செய்தியறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், அமெரிக்காவில் வாழும் ஒரு காலிஸ்தான் ஆதரவு சீக்கியரை கொலை செய்வதற்கு இந்தியா சதித்திட்டம் தீட்டியதாகவும், அதை அமெரிக்கா முறியடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சதியில் இந்திய அரசின் தொடர்பு இருப்பதாகவும் அதில் குறிப்பிட்டிருந்தது.
இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் இன்னும் அமெரிக்காவால் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.
செய்தியறிக்கையின்படி, இந்த சதித் திட்டத்தின் இலக்கு குர்பத்வந்த் சிங் பன்னு. இவர் சீக்கிய தனி நாடான காலிஸ்தானை கோரும் பிரிவினைவாதி. காலிஸ்தானை உருவாக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள ‘நீதிக்கான சீக்கியர்கள்’ அமைப்பின் வழக்கறிஞர். அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய இரு நாடுகளின் குடியுரிமையும் வைத்திருக்கிறார். இவர் 2020ஆம் ஆண்டு இந்தியாவால் ‘பயங்கரவாதி’ என்று அறிவிக்கப்பட்டிருந்தார்.
இந்த ஆண்டு ஜூன் மாதம், காலிஸ்தான் ஆதரவாளரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கனடாவின் வான்கூவரில் சுட்டுக் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.