இந்திய நாடாளுமன்ற மக்களவைக்குள் மர்மப் பொருட்களை வீசிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று (13) மக்களவையில் பூஜ்ஜிய நேர நிகழ்வுகள் நடந்து கொண்டிருந்தபோது பார்வையாளர்கள் பகுதியில் இருந்த இருவர் அத்துமீறி இருக்கையில் குதித்ததுடன் அவர்களின் கைகளில் வைத்திருந்த புகை கக்கும் கருவியிலிருந்து மஞ்சள் நிற புகை வெளியேறியதும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து , அந்த இருவரையும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் உதவியுடன் அவை பாதுகாவலர்கள் மடக்கிப் பிடித்து காவல்துறையினாிடம் ஒப்படைத்துள்ளனர்.
சரியாக 1 மணியளவில் பார்வையாளர் பகுதியில் இருந்து அவைக்குள் குதித்த குறித்த இருவரும் ‘சர்வாதிகாரத்தை அனுமதிக்கமாட்டோம்’ என்று கோஷமிட்டுள்ள அதேவேளை அவைக்கு வெளியே கைதான இரு பெண்களும் ’பாரத் மாதா கி ஜே’ என்று முழக்கமிட்டுள்ளனர்.
குறித்த பெண்களில் ஒருவர் தன் பெயர் நீலம் என்று தெரிவித்ததாகவும், மணிப்பூர் வன்முறையைக் கண்டித்து போராட்டம் நடத்தியதாக காவல்துறையினரிடம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து, நாளுமன்றத்திற்கு சென்ற டெல்லி காவல் ஆணையர், பாதுகாப்பு மீறல் எப்படி சாத்தியமானது என்பது தொடர்பாக விரிவான விசாரணையில் ஈடுபட்டுள்ளார்.