சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி பெண்களை ஏமாற்றி பணத்தை மோசடி செய்த வெளிநாட்டுப் பிரஜைகள் இருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்கள் இருவரும் நைஜீரிய பிரஜைகள் என காவற்துறையினர் தெரிவித்தனர்.
மேலும் இருவருக்கும் கடவுச்சீட்டு இல்லை என்றும், கடவுச்சீட்டுகள் நீதிமன்ற வசம் இருப்பதும் தெரியவந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த பண மோசடிகள் தொடர்பில் காவற்துறையினரிடம் 3 முறைப்பாடுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், 3 முறைப்பாடுகளும் பெண்களால் செய்யப்பட்டுள்ளன.
19.01.2023 அன்று 1,045,000 ரூபாவும், 07.03.2023 அன்று 10,222,634 ரூபாயும், 06.07.2023 அன்று 18,531,676 ரூபாயும் மோசடி செய்யப்பட்டதாக இந்தப் பெண்கள் முறையிட்டுள்ளனர்.
இதன்படி, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் சமூக ஊடகப் பிரிவினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த சந்தேக நபர்களால் சமூக ஊடகங்கள் மூலம் தொடர்பு கொண்டு முறைப்பாடு செய்த இருவர், தன்னை வைத்தியர்கள் என கூறி அவர்களுடன் காதல் உறவில் ஈடுபட்டு பணத்தை மோசடி செய்தது தெரியவந்துள்ளது.
மற்றைய பெண் ஒரு காரை வென்றதாகக் கூறி பணத்தை ஏமாற்றி, காரின் காசோலை மற்றும் பிற ஆவணங்களை கூரியர் சேவை மூலம் அனுப்பியுள்ளார்.
இது தொடர்பில் நீதிமன்றில் உண்மைகள் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், வங்கிக் கணக்குகள் தொடர்பில் கிடைத்த தகவலை அடுத்து அளுத்கம பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர்கள் இருவரையும் கைது செய்ததாக காவற்துறையினர் தெரிவித்தனர்.
சிசிடிவி காட்சிகளின் படி, இருவர் அடையாளம் காணப்பட்டதுடன், அவர்கள் கைது செய்யப்பட்ட போது, 14 ஏடிஎம் அட்டைகள் மற்றும் 5 கையடக்கத் தொலைபேசிகள் காவற்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.