170
யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞனை காவல்துறையினா் உதைந்து விழுத்தியதில், இளைஞன் விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். கோப்பாய் தெற்கை சேர்ந்த 41 வயதுடைய செல்வநாயகம் பிரதீபன் என்பவரே உயிரிழந்துள்ளார்.
பலாலி வீதியில் கடமையில் இருந்த பலாலி காவல் நிலையத்தில் கடமையாற்றும் இரு காவல்துறை உத்தியோகஸ்தர்கள், வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞனை மறித்த போது, இளைஞன் மோட்டார் சைக்கிளை நிறுத்தாது பயணித்துள்ளார்.
அதனை அடுத்து, காவல்துறையினா் உத்தியோகஸ்தரும் இளைஞனை தமது மோட்டார் சைக்கிளில் துரத்தி சென்று, சுன்னாகம் காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட புண்ணாலைக்கட்டுவான் பகுதியில் உள்ள பிள்ளையார் ஆலயத்தை அண்மித்த பகுதியில் , மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த இளைஞனை எட்டி உதைந்துள்ளனர். அதனால் நிலைதடுமாறிய இளைஞன் மோட்டார் சைக்கிளுடன் மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகி படுகாயமடைந்துள்ளார். அதனை அடுத்து, இளைஞனை மீட்டு தெல்லிப்பழை வைத்திய சாலையில் அனுமதித்த நிலையில் இளைஞன் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில், சுன்னாகம் காவல்துறையினா் விசாரணைகளை முன்னெடுத்து உள்ளனர்.
அதேவேளை இளைஞனை துரத்தி சென்று உதைந்து விழுந்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள காவல்துறை உத்தியோகஸ்தரை காவல்துறையினர் தமது பாதுகாப்பில் தடுத்து வைத்துள்ளனர்.
Spread the love