இந்தப் பூமியின் அழகு அதன் பன்மைப் பண்பாடுகளிலேயே தங்கியுள்ளது. பூமியில் வாழும் மனிதர்களாகிய நாம் நமது பன்மைப் பண்பாடுகளை விளங்கிக் கொண்டு சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் எனும் மானுட நேயத்தை வலுப்படுத்தி இயற்கையின் சமநிலையினைக் குழப்பாமல் வாழும் வாழ்க்கை மகிழ்ச்சிகரமானது.
பன்மைப் பண்பாடுகளை மறுதலித்து எல்லாவற்றையும் ஒற்றைத் தன்மைக்குள் கொண்டு வரும் ஆதிக்க நோக்கத்தோடு முன்னெடுக்கப்பட்டு வரும் செயற்பாடுகள் பெரும்பாலும் மகிழ்ச்சிகரமான வாழ்தலுக்கு ஊறு விளைவிப்பதாகவே இருப்பதனைக் கண்டும் கற்றும் அறிய முடிகின்றது.
இதனாலேயே பன்மைத் தன்மைகளையும் அவற்றின் வித்தியாசங்களையும் அங்கீகரித்தவாறு சகோதரத்துவத்துடனான ஒருமைப்பாடுகளை உருவாக்க வேண்டும் என்ற கருத்துச் சமகாலத்தில் உலகளவில் மேலெழுந்து நிற்கின்றது.
இந்தவகையில் இலங்கைத் தமிழ்ப் பண்பாடுகளுள் குறிப்பாக நம்பிக்கை, பக்தி சார்ந்த சடங்குப் பண்பாடுகளுள் தனித்துவத்துவங்களைப் பறைசாற்றும் உள்ளுர்ச் சடங்குக் கோவில்களுள் ஒன்றாக யாழ் மாவட்டத்தின் கவுணாவத்தை நரசிங்க வைரவர் கோவில் உள்ளமை கவனத்திற்குரியது.
எடுத்துக் காட்டாக இக்கோவிலின் வருடாந்தச் சடங்கு பற்றிய பொது அறிவித்தல் அச்சடங்குப் பண்பாட்டில் பயன்பாட்டில் இருந்து வரும் உள்ளுர் மொழிப் பிரயோகத்தில் உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டிருப்பதனைக் காணலாம்.
அதாவது ‘வருடாந்த மரபுவழி வேள்விப் பொங்கல் – 2024’ என்ற தலைப்பில் ‘விளக்கு வைப்பு’, ‘எட்டாம் மடை’ என்று இதன் அறிவித்தல்கள் அமைந்துள்ளன.
உள்ளுர்ப் பண்பாடுகளில் இடம்பெறும் காரியங்களுக்கான காரணங்களை அறியத் தருபவையாக, உள்ளுர் மொழிப் பிரயோகங்கள் விளங்கி வருகின்றன.
எனினும் கருத்து விளக்கத்தில் அக்கறை காட்டாது, காலனியம் விதைத்துள்ள மனோநிலையுடன் வேற்றுப் பண்பாடுகளின் கவர்ச்சிகரமான சொற்களை உள்வாங்கி நம்சடங்கின் அறிவிப்புகளைச்; செய்யும் போது நாம் நமது உள்ளுர்ச் சடங்குப் பண்பாடுகளிலிருந்து மெல்ல மெல்ல தூரவிலகிப் போகின்றோம் என்பது கசப்பான உண்மையாகும்.
எனவே நம் சடங்குப் பண்பாடுகளின் வித்தியாசங்களையும் தனித்துவங்களையும் ஆக்கபூர்வமாக எடுத்தியம்பும் வகையில் உள்ளுர் மொழிப் பாவனையில் வருடாந்தச் சடங்கு பற்றிய பொது அறிவிப்புகளையும், பொது விளம்பரங்களையும் செய்வது காலத்தின் தேவையாக உள்ளது எனலாம்.
இவ்வாறு அறிவித்தல்களைச் செய்யும் போது கருத்து விளக்கத்துடன் சடங்கினைச் செய்வோர் எனும் புரிதல் வலுவாகத் தெரியவும் வரும்.
இதற்கான முன்னுதாரணமாக கவுணாவத்தை நரசிங்க வைரவர் கோவிலின் ‘வருடாந்த மரபுவழி வேள்விப் பொங்கல் – 2024’ என்ற அறிவித்தலைக் கொள்ளலாம்.
து.கௌரீஸ்வரன்,
27.05.2024