மட்டக்களப்பு மயிலத்தமடு – மாதவனை பண்ணையாளர்களுக்கு ஆதரவாக வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று (03.06.24) விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு – சித்தாண்டியில் மயிலத்தமடு – மாதவணை மேய்ச்சல் தரையை பெற்றுத்துருமாறு கோரி தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவந்த பண்ணையாளர்களுக்கு ஆதரவாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5ஆம் திகதி பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்ததனர்.
இதன்போது, வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் குறித்த 6 பல்கலைக்கழக மாணவர்களும் கைது செய்யப்பட்ட நிலையில் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் குறித்த வழக்கு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதவான் மதுஜலா கேதீஸ்வரன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குறித்த 6 மாணவர்களையும் விடுதலை செய்ய நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஏறாவூர் காவற்துறையினர் போதிய சாட்சியங்களை முன்வைக்கத் தவறியமை, குற்றப்பத்திரிகையில் காணப்பட்ட முன்னுக்கு பின் முரணான விடயங்கள் மற்றும் குற்றச்சாட்டுகளை முன்கொண்டு செல்வதற்கான போதிய காரணங்கள் முன்வைக்கப்படாமை உள்ளிட்ட விடயங்களின் கீழ் 6 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.