கடந்த 16ஆம் திகதி யாழ்ப்பாணத்தில், புங்கங்குளம் சந்தியில் அமைந்துள்ள ஒரு சுற்றுலா விடுதியில் ஒரு பரிசளிப்பு வைபவம் இடம்பெற்றது.தமிழ் நாட்டின் விருது நகர் ரோட்டறிக் கழகத்தின் இளையோருக்கான தலைமைத்துவ விருதுகளை வழங்கும் நிகழ்வு அது.(RYLA-Rotary Youth Leadership Awards) கனடாவை மையமாகக் கொண்டியங்கும்”ஈ-குருவி-புதிய வெளிச்சம்”அமைப்பு தமிழகத்தின் இதயம் நல்லெண்ணெய் தயாரிப்பு நிறுவனத்தின் அனுசரணையோடு இளம் தொழில் முனைவோருக்கான வதிவிடக் கருத்தரங்கு ஓன்றினை ஒழுங்குபடுத்தியிருந்தது.இளம் தொழில் முனைவோரின் நம்பிக்கைகளை,தொழில் திறன்களைக் கட்டியெழுப்புவது அக்கருத்தரங்கின் நோக்கமாகும்.அதில் பங்குபற்றிய இளையோர் பரிசளிப்பு வைபவத்தில் உரையாற்றினார்கள்.அவர்கள் ஆற்றிய உரைகளின் சாராம்சம் கால முக்கியத்துவம் உடையது;அரசியல் முக்கியத்துவம் உடையது; நம்பிக்கையூட்டுவது.
அதில் ஓர் இளைஞர் பின்வரும் பொருள்பட பேசினார் “நான் யார்? இந்த நாட்டில் என்னுடைய பங்கு என்ன? என்ற கேள்வி என்னிடம் இருந்தது… இந்த வதிவிட கருத்தரங்கில் கலந்து கொண்ட பின் அதற்குரிய பதிலைப் பெற்றுக் கொண்டேன் ” என்று. ஏனைய பெரும்பாலான இளையோர் தாங்கள் எந்தெந்த துறைகளில் தொழில் முனைவோராக எழுச்சி பெறுகிறார்கள் என்று பேசினார்கள். விஸ்வமடுவிலிருந்து வந்த ஒரு இளையவர் தான் எப்படி தனது சொந்த காயங்களில் இருந்து மீண்டு எழுந்தார் என்பதனைப் பேசினார். போரில் முகம் சிதைந்து கிடந்த அவர் எப்படி ஒரு தொழில் முனைவோராக வெற்றி பெற்றார் என்பதனை விளங்கப்படுத்தினார். அந்த இளையோரின் குரல்களிலும் வார்த்தைகளிலும் நம்பிக்கை பிரகாசித்தது.தமது தாய் நிலத்தில் தாம் தமது தொழில்களை கட்டியெழுப்புவோம் என்ற நம்பிக்கையை அவர்கள் பகிர்ந்து கொண்டார்கள்.
அந்த நம்பிக்கைதான் இங்கு இன்று இந்த கட்டுரையின் குவிமையம். இந்த நாட்டில் தன்னுடைய வகிபாகம் என்ன? தான் யார்? என்பதைக் குறித்து ஒரு தொகுதி இளையோர் சிந்திக்கிறார்கள்.இன்னொரு தொகுதி அதன் வேர்களை அறுத்துக் கொண்டு புலம்பெயர்ந்து வருகின்றது.
சில மாதங்களுக்கு முன்பு கனேடிய விசா வழங்கும் அலுவலகத்திற்குச் சென்றிருந்தேன்.ஒர் அழகிய இளம் பெண் தன்னுடைய பாஸ்போர்ட்டைக் கையளிப்பதற்கு வந்திருந்தார். அவர் தன்னுடைய பாஸ்போர்ட்டை அங்கு கையெழுத்து விட்டு திரும்பி வருகையில் கவனித்தேன். அவருடைய கண்கள் அசாதாரணமாக மகிழ்ச்சியால் பூரித்து போயிருந்தன. கிடைத்தற்கரிய ஒரு வேறு கிடைத்ததுபோல அவர் நடந்து போனார்.அந்த அலுவலகம் அமைந்திருக்கும் சிறிய வீதி காலி வீதியில் போய் எறும் சந்தியில் அவருடைய தாயும் சகோதரரும் அவருக்காக காத்து நின்றார்கள். அவர்களைக் கண்டதும் அவர் ஒரு பெரிய காரியத்தைச் சாதித்து விட்டு வெற்றியின் வாசலில் நிற்பவர் போல நடந்து கொண்டார். இது முதலாவது அவதானிப்பு.
இரண்டாவது அவதானிப்பு, யாழ்ப்பாணத்தில் க.பொ.த உயர்தரப் பிரிவில் கணிதம் விஞ்ஞானம் ஆகிய பிரிவுகளில் கற்கும் பிள்ளைகளுக்கான தனியார் கல்வி நிறுவனம் ஒன்று அமைந்திருக்கும் கன்னாதிட்டி வீதியில் ஒரு நிறுவனத்தின் பெயர்ப்பலகையில் பின்வருமாறு உண்டு ” be a Canadian”- “கனேடியனாக இரு:புதிய வாழ்க்கையின் முதல்படி”
கனடாவுக்கு போவது; லண்டனுக்குப் போவது; தாயகத்தை விட்டுப் போவது என்பது ஒரு பகுதி இளையோர் மத்தியில் தணியாத தாகமாக மாறி வருகிறது. அதே சமூகத்தில் இன்னொரு பகுதி இளையோர் இந்த நாட்டில் “என்னுடைய வகிபாகம் இது; நான் எனது தொழிலையும் நாட்டையும் ஒருசேரக் கட்டி எழுப்ப போகிறேன்” என்று நம்பிக்கையோடு மேலெழுகிறார்கள்.
இக்கட்டுரை புலப்பெயர்ச்சிக்கு எதிரானது அல்ல.புலம்பெயர்பவர்களின் பயங்களை; கவலைகளை; எதிர்காலத்தைக் குறித்த கனவுகளை இக்கட்டுரை அவமதிக்கவில்லை. ஆனால் ஏற்கனவே நிலம் சிறுத்து வருகிறது. அதாவது தாயகம் சிறுத்து வருகிறது. இப்பொழுது சனமும் சிறுக்க தொடங்கிவிட்டது.இது தொடர்பாக திருத்தமான புள்ளிவிபரங்கள் எந்த ஒரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரிடமும் இருப்பதாகத் தெரியவில்லை.கனடா அதன் விசிட் விசா விதிகளில் தளர்வுகளை ஏற்படுத்திய பின் அண்மை ஆண்டுகளில் இதுவரை இருப்பதாயிரத்துக்கும் குறையாதவர்கள் நாட்டிலிருந்து புலம்பெயர்ந்து விட்டதாக உத்தியோகப்பற்றற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு புலம்பெயர்வதற்காகக் காத்திருக்கும் இளையவர்கள் மத்தியில் குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதாக ஒரு மனநல மருத்துவர் அண்மையில் தெரிவித்தார்.”இந்த நாட்டில்,இந்த சமூகத்தில் நான் அதிககாலம் இருக்கப் போவதில்லை. இனி இது எனது நாடுமல்ல எனது சமூகமும் அல்ல. எனவே விசா கிடைப்பதற்கு இடைப்பட்ட காலகட்டத்தில் நான் எப்படியும் வாழ்ந்துவிட்டுப் போகலாம்” என்று சிந்திக்கும் ஒரு பகுதி இளையவர்கள் மத்தியில் குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதை அந்த மருத்துவர் சுட்டிக்காட்டினார்.
ஒருபுறம் நகர்ப்புறங்களில் அன்றாட கூலி வேலைக்கு ஆட்கள் இல்லை.பல வாகனம் திருத்தும் கடைகளில் உதவிக்கு ஆட்கள் இல்லை.மேசன் வேலை ,வயரிங் வேலை, பெயிண்டிங் வேலை போன்ற வேலைகளுக்கும் உதவி ஆட்கள் கிடைப்பது அரிது.அன்றாடச் சம்பளத்துக்கு வருபவர்கள் கைபேசிகளை கொண்டு வருகிறார்கள். வேலை பாதி;கைபேசி பாதி.
இன்னொருபுறம் வேலையற்ற பட்டதாரிகள் வட-கிழக்கில் மட்டும் கிட்டத்தட்ட ஆறாயிரத்துக்கும் குறையாதவர்கள் வேலை வாய்ப்புக்களுக்காகக் காத்திருக்கிறார்கள்.தமது கல்வித் தகமையைவிடக் கீழான உத்தியோகங்களுக்குப் போகிறார்கள்.
ஒருபுறம் கூலி வேலைகளுக்கு ஆட்கள் இல்லை.இன்னொருபுறம் பட்டதாரிகளுக்கு வேலை இல்லை. இப்படிப்பட்டதோர் சமூகத்தில் இருந்து படித்தவர்களும் முக்கிய பொறுப்புகளை வகித்தவர்களும் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால்,அதே சமூகத்தில் ஒரு சிறு தொகுதி தொழில் முனைவோர் அதுவும் இளையோர் நம்பிக்கையோடு மேடை ஏறுகிறார்கள்.
தொழில் முனைவோரைக் கட்டியெழுப்புவது என்பது தேச நிர்மாணத்தின் ஒரு பகுதிதான்.அந்த அடிப்படையில் பார்த்தால் அந்த வதிவிடக் கருத்தரங்கு கவனிப்புக்குரியது. அதில் மற்றொரு செய்தியும் உண்டு
அந்த கருத்தரங்கை ஒழுங்குபடுத்தியது புலம்பெயர்ந்த தமிழ் அமைப்பும் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பெரு முதலாளியுந்தான்.வளவாளர்களாக வந்தவர்களும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்தான்.தமிழகத்தின் விருதுநகர் ரோட்டறி கழகத்தின் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் அது முன்னெடுக்கப்பட்டது.
அரசற்ற ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை அவர்களுடைய தேச நிர்மாணத்தின் பங்காளிகள் என்று பார்க்கும்பொழுது புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்தையும் தமிழகத்தையும் குறிப்பிட்டுச் செல்லலாம். நிதிப் பலம் மிக்க புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகமானது ஈழத் தமிழர்களின் ரத்தமும் சதையுமாக இருக்கிறது.
அது தாயக அரசியலில் தொலை இயக்கி வேலைகளைச் செய்கிறது என்ற குற்றச்சாட்டுக்கள் உண்டு; தாயகத்தோடு கலந்து பேசாமல் பிரகடனங்களை வெளியிடுகிறது என்ற குற்றச்சாட்டுக்கள் உண்டு;எனினும்,தேசத்தைக் கட்டியெழுப்பும் செய்முறையைப் பொறுத்தவரை அதில் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகம் முதன்மைப் பங்காளி. அடுத்தது தமிழகம்.
நிதிப்பலம் மிக்க புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகமானது தமிழகத்தின் திரைப்படத் தொழிற்துறைக்குள் செல்வாக்கு மிக்க முதலீட்டாளர்களாக வளர்ச்சி பெற்று வருகிறது.அது பெருமளவுக்கு சீரியஸான கலை முதலீடு அல்ல. இனப்படுகொலைக்கு எதிரான நீதியைக் கோரும் ஒரு மக்கள் கூட்டத்தின் கூட்டுக் காயங்களையும் கூட்டு மனோநிலையையும் பிரதிபலிக்கும் கலை முயற்சியும் அல்ல. அவை பெருமளவுக்கு ஜனரஞ்சகமானவை. ஆனால் கோடிக் கணக்கான காசு புரளும் முதலீடுகள்.
அதேசமயம்,சினிமா தவிர தமிழகத்தின் ஏனைய தொழில்துறைகளில் புலம்பெயர்ந்த தமிழ்த் தரப்பின் முதலீடுகள் ஒப்பீட்டளவில் குறைவு.இது தொடர்பாக தேசத்தை கட்டியெழுப்புவது என்ற நோக்குநிலையில் இருந்து ஒரு முதலீட்டு திட்டம் வகுக்கப்படவில்லை.
தமிழகம் புவியியல்ரீதியாகவும் இனரீதியாகவும் மொழிரீதியாகவும் பண்பாட்டு ரீதியாகவும் உணர்வுபூர்வமாகவும் ஈழத்தமிழர்களுக்கு மிக அருகில் காணப்படுகின்றது.இறுதிக்கட்டப் போரில் நடந்த துரதிஷ்டவசமான சம்பவங்களின் விளைவாக இந்தப் பிணைப்புகள் அதிகம் சோதனைக்கு உள்ளாகியுள்ளன. மீனவர்கள் விவகாரம் தமிழகத்தில் இருந்து வரக்கூடிய பெரு முதலாளிகளால் தாங்கள் விழுங்கப்பட்டு விடுவோம் என்ற ஈழத்தமிழ் வணிகர்களின் அச்சம் போன்றவையும் அந்த உறவுகளை மேலும் சோதனைக்கு உள்ளாக்குகின்றன.
தமிழகம் இப்பொழுது இந்தியாவின் மிக வேகமாக முன்னேறும் மாநிலங்களில் ஒன்று.மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக அது இரண்டாவதாக பெரிய பொருளாதார வளர்ச்சியைக் கொண்ட மாநிலமாகக் காணப்படுகின்றது.
இப்படிப்பட்ட புதிய வளர்ச்சிகளின் பின்னணியில்,நிதிப் பலம்மிக்க புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்திலிருந்து ஓர் அமைப்பும் இந்தியாவின் வேகமாக வளரும் பொருளாதாரங்களில் ஒன்று ஆகிய தமிழகத்தைச் சேர்ந்த தொழிற்சார் வளவாளர்களும் இணைந்து இளம் தொழில் முனைவோருக்கான ஒரு வதிவிடக் கருத்தரங்கை நடாத்தியிருக்கின்றனர்.
“இந்த மண் எங்களின் சொந்த மண்” என்று பாடிய ஒரு மக்கள் கூட்டத்தின் மத்தியில் இருந்து இளையவர்கள் வெளியேறிக் கொண்டிருக்கும் ஒரு காலகட்டத்தில்,அதே இளையவர்கள் மத்தியில் தமது சொந்தத் திறமைகளின் மீது நம்பிக்கையைக் கட்டியெழுப்ப இது போன்ற கருத்தரங்குகள் உதவும். இந்த விடயத்தில் புலம்பெயர் அமைப்பு ஒன்றின் தன்னார்வ முயற்சிகளும் தேசத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற தாகமும், தமிழகத்தின் துறைசார் நிபுணத்துவமும் ஒன்றிணையும் போழுது, அது புதிய நொதிப்புகளை ஏற்படுத்த முடியும்.
தமிழ் நோக்கு நிலையில் இருந்து தாயகமும் டயஸ்பொறாவும் தமிழகமும் இணைந்து வளங்களையும் அறிவையும் பரிமாறிக் கொள்வதும் கூட்டு முதலீடுகளைக் குறித்துச் சிந்திப்பதும் பொருத்தமானவை.தாயகத்தில் உள்ள தொழில் முனைவோரைப் பொறுத்தவரை ஊரில் உழைக்கலாம்,சொந்த காலில் நிற்கலாம் என்ற நம்பிக்கை அதிகரித்தால், வேரை அறுத்துக் கொண்டு தாய் நிலத்தை விட்டு வெளியேறும் நிலைமைகள் தோன்றாது.தாய் நிலத்தில் தன்னுடைய வகிபாகம் என்ன என்ற தெளிவு இருந்தால், இளைய தலைமுறை நாட்டை விட்டு வெளியேற விரும்பாது. புலம்பெயர்ந்த தமிழ் முதலாளிகளும் தமிழக முதலாளிகளும் தாயகத்தில் முதலீடு செய்ய வேண்டும்.அதை கொழும்பின் நோக்கு நிலையில் இருந்து செய்வதை விடவும் தாயகம்- தமிழகம்- டயஸ்பெரா ஆகிய முக்கூட்டு நோக்கு நிலையில் இருந்து செய்வது புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு ஒப்பீட்டுளவில் பாதுகாப்பாக இருக்கும். குறிப்பாக,தாயகத்தைக் கட்டியெழுப்புவது என்ற நோக்கு நிலையில் அது அதிகம் பொருத்தமானதும்கூட.