மண்டூர்க் கீரை
நீரினாலும் நிலத்தினாலும் சமமாக சூழப்பட்ட இயற்கை எழில் கொஞ்சம் மீன் பாடும் தேநாட்டில் உள்ளதே மண்டூர் கிராமமாகும். மூங்கில் ஆறு வளம் பெருகிச் சிறப்பிப்பதோடு சின்னக் கதிராமம் என்று அழைக்கப்படும் மண்டூர் ஸ்ரீ கந்தசுவாமி திருவருள் நிறைந்திருக்கும் இயற்கை வளம் மிகுவாகக் கொட்டி கிடக்கின்ற மண் இது. இப்படுவான்கரைப் பிரதேசத்தின் “மண்டூர் கீரையடி மண்ணும் கவி பாடும்” எனப் புகழ் பெற்ற பாடல் வரியானது இவ்வூரின் கீரையின் சிறப்பினை பாடுவதாகவே அமைந்திருந்தது. மண்டூர் என்று சொன்னாலே கீரை தான் அனைவரது ஞாபகத்திற்கும் வந்து செல்லும். அவ்வாறான கீரை பற்றிய தொகுப்பினை நோக்குவோம்.
மண்டூருக்கும் கீரைக்குமான தொடர்பினை நோக்குவோமானால், ஆதி காலத்திலிருந்தே கீரை என்று சொன்னாலே அது மண்டூரில் மட்டும் தான் இருந்தது. பொன்னாங்கண்ணி மற்றும் குப்பைக்கீரை முதலானவை போலவே கீரையினையும் ஆதியில் வாழ்ந்தவர்கள் அதன் சுவை கண்டு காட்டில் இருந்தது எடுத்து வந்து தங்களது சேனைகளில் பயிரிட்டார்கள். தனித்துவமான சுவை பொருந்தியதாகவே இவ் ஊரின் கீரை காணப்பட்டது. பிள்ளையாரடி என அழைக்கப்பட்ட மருங்கை நகரிலே இதற்கான விதையானது முதலாவதாக இடப்பட்டது. அக்காலத்தில் இங்கிருந்தே வீரமுனை, அண்ணமலை, நாவிதன்வெளி, கல்முனை, சொறிக்கல்முனை, தாந்தாமலை, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி, எருவில், குருமண்வெளி முதலான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. அதன் பின்னரே ஏனைய கிராமங்களுக்கு இதன் விதைகள் பரவலாக்கமடைந்து பயிரிடுதலானது இடம்பெற்றது. என்ன தான் பயிரிடப்பட்டாலும் அது மண்டூர் கீரையின் சுவையினை தொடக் கூட முடியவில்லை. இதற்குக் காரணம் மண்ணின் இயற்கை வளமும், மூங்கிலாற்று நீர் வளமும், தில்லைக் கந்தனின் அருளாட்சியுமே என அறுதியிட்டுக் கூறலாம்.
இதன் பயிரிடும் முறைகளை பார்த்தோமானால், குறிப்பிட்ட நிலப்பரப்பினை பண்படுத்தி உயர்ந்த நீர் சதுரமான நீளமான பாத்திகள் அமைக்கப்பட்டு அதில் கீரை விதைகள் விதைக்கப்படும். விதையானது ஏனைய பறவைகள், விலங்குகளிடமிருந்து பாதுகாக்க தென்னை ஓலைகள் பாத்தியின் மேல் போடப்படும். 20 நாட்கள் சென்றவுடன் பாத்தியிலிருந்து இரண்டு கன்றுகளாக பிரித்து இன்னும் ஒரு இடத்தில் வரிசையாக நடப்பட்டு 45 நாட்கள் பராமரிக்கப்பட்டு வியாபாரத்திற்காகப் பிடுங்கப்படும். மீண்டும் பயிரிடுவதற்கான விதைகளைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில், ஆறு மாத காலங்கள் எவ்வித பராமரிப்புமின்றி விடப்பட்டு அதற்காக பதத்தினை பெற்றவுடன் வெட்டப்பட்டு வெயிலில் காயவைத்து விதையினை பெற்றுக் கொள்வார்.
இதன் வகைகளை நோக்குகின்ற போது முளைக்கீரை, பச்சைக் கீரை, சிவப்புக் கீரை, கண்ணாடிக் கீரை மற்றும் மரக்கீரை என்று பாகுபடுத்தப்படும். முளைக்கீரையானது விதை விதைக்கப்பட்டு 20 நாட்களின் பின்னரும் ஒழுங்கான வளர்ச்சி இல்லாதவை அவ்வாறே பாதியில் விடப்பட்டு ஒரு மாத காலத்தின் பின்னர் பிடுங்கி விற்கப்படும். பச்சைக் கீரை, சிவப்பு கீரை மற்றும் கண்ணாடி கீரை 45 நாட்களின் பின்னர் விற்பனை செய்யப்படும்.
கண்ணாடி கீரை பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். சிவப்பு இலையின் மேல் கருப்பு நிறம் ஆங்காங்கே படர்ந்து அழகாக காட்சியளிக்கும். அனைவரும் இதனை விரும்பி வாங்குவார்கள். மரக்கீரையானது மூன்று மாதங்கள் தாண்டியும் நீரூற்றப்பட்டு வளர்க்கப்படும். இது ஒரு ஆளின் உயரத்திற்கு வளர்க்கப்பட்ட பின்னரே வியாபாரம் செய்யப்படும். இது மண்டூர் முருகன் ஆலயம், மாமாங்க பிள்ளையார் ஆலயம், தாந்தாமலை முரகன் ஆலயம் முதலான பல இடங்களுக்கு என தனித்துவமாக வளர்க்கப்படும். அதுமட்டுமல்லாது சித்திரபுத்திரனார் விரதம், கந்த ச~;டி விரதம், கேதார கௌரி விரதம், பிள்ளையார் விரதம் இவற்றினை மையமாகக் கொண்டும் கீரையானது பயிரிடப்படும். மேலும் சிறுகடை வியாபாரிகளை மையமாகக் கொண்டும், தங்களது சேனைகளை நாடி வருபவர்களுக்காக விற்பனை செய்யவும் சேனையாளர்கள் பயிரிடுகின்றனர்.
அத்தோடு மண்டூர் கீரை சமையல் முறையினைப் பார்த்தோமானால், “மண்டூர் கீரை மண்டூர் தண்ணீருக்குத் தான் சுவை” என்று சொல்வார்கள். முருகன் ஆலய திருவிழா காலங்களில் போது தரிசனத்திற்காக வருபவர்கள் அனைவரும் கீரை வாங்கிய கையோடு ஒரு போத்தலில் கிணற்றுத் தண்ணீரை அருகில் உள்ள வீடுகளுக்கு சென்று வாங்கிக் கொண்டு செல்வது ஒரு சிறப்பானதும் வியக்கத்தக்கதுமான விடயமாகும். கீரையானது பல்வேறு விதமாக சமையல் செய்யப்படும். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக காணப்படும். எப்பொழுதும் எந்தவொரு வகைச் சமயலானாலும் கீரை துப்புரவு செய்யப்பட்டு கழுவப்பட்ட பின்னரே சிறிது சிறிதாக அரியப்படும். மேலும் மண் சட்டியில், விறகு அடுப்பில் சமைக்கின்ற வழக்கம் உண்டு. போது தான் அதன் முழு சுவையினையும் சுவைக்க முடியும் என்பது தவிர்க்க முடியாத உண்மையுமாகும்.
இவ்வாறாக கீரையின் பல்வேறு சமையல் முறையினையும் நோக்குகின்ற போது,
கீரை சுண்டல் எனும் போது கீரையோடு மிளகாய்;, வெங்காயம்;, மஞ்சள் தூவி, உப்பு நீர் சிறிதளவு ஊற்றி சிறிது நேரம் அவிக்கப்படும். இதற்கு தண்ணீர் ஊற்றக்கூடாது. அவிந்ததன் பின்னர் சிறிது தேங்காய் பூ தூவி, கிளறி விட்டு இறக்கி விட வேண்டும். அதிகளவான நேரம் அடுப்பில் வைக்கவும் கூடாது. கீரை அளவுக்கு அதிகமாக வேக வைக்கின்ற போது அதன் சுவையானது கெட்டுப் போய் விடக் கூடுவதோடு, தகாத மணமும் வரும். அத்தோடு தேங்காய் பூ கருகாமல் கிளறி விடுதல் முக்கியமானதாகும்.
தேங்காய் பூவோடு, உப்பு, மஞ்சள், மிளகு, பச்சை மிளகாய், சேர்த்து அம்மியில் வைத்து அரைத்து கீரை அவிந்ததும் இவற்றினையும் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட்டு இறக்கப்படும்.
ஆலய அன்னதானத்திற்காகவும், சைவ சமய கிரியைகளுக்காகவும் ஏழு மரக்கறி உணவானது சமைக்கப்படுவது வழக்கம். ஏழு மரக்கறியில் கீரையும் ஒன்றாகும். மரவள்ளிக் கிழங்கும் கத்திரிக்காயும் சேர்த்து கீரையுடன் சமைக்கும் போது அது தனி சுவையாக இருக்கும்.
கந்த ச~;டி விரதத்தின் இறுதி நாள் பாரனையில் இருந்து விரத முடிவுக்காக மரவள்ளி கிழங்கு அவியலும் கீரை கறியும் சமைக்கப்படும். இதற்காகவே மண்டூரை நோக்கி பலர் கீரை பெற்றுக் கொள்ள வருகை தருவார்கள்.
மேலும் கீரையானது தேங்காய் பாலூற்றியும் சமைக்கப்படும். இது அநேகமான வீடுகளில் தினசரி சமையலாகவே இருக்கும். கீரை அவிந்தவுடன் தலைப்பால் சிறிதளவு விட்டு சிறிது நேரம் அடுப்பில் வைக்கப்பட்டு இறக்கப்படும். இவ்வாறாக கீரையினை வெவ்வேறு விதமாக சமைக்கின்ற முறையானது காணப்படுகின்றது.
கோபாலகிருஸ்ணன்.டினுஜா