தகவல் தொழில்நுட்ப செயலிழப்பு (IT outage) காரணமாக உலகமெங்கும் விமானப் போக்குவரத்து பெரும் பாதிப்பைச் சந்தித்திருக்கிறது. வங்கி மற்றும் மருத்துவம் உள்ளிட்ட சேவைகளும் இதனால் பாதிப்பை சந்தித்துள்ளன.
பல்வேறு விமான நிலையங்களில் விமானச் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் விமானப் போக்குவரத்து தாமதமாகியும் வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சைபர்-செக்யூரிட்டி நிறுவனமான க்ரவுட்ஸ்ட்ரைக் இந்தச் செயலிழப்புக்குப் பொறுப்பேற்றுள்ளது. மைக்ரோசாஃப்ட் வின்டோஸில் செயல்படும் கணினி உள்ளிட்ட கருவிகளில் வைரஸ் தொற்று ஏற்படுவதைத் தடுக்க உருவாக்கப்பட்ட ‘ஃபால்கன் அண்டி-வைரஸ்’ (Falcon antivirus software) மென்பொருளைப் புதுப்பித்த போது (update) இந்தச் செயலிழப்பு நிகழ்ந்துள்ளது என்கிறது அந்த நிறுவனம்.
இந்த தகவல் தொழில்நுட்பச் (ஐ.டி.) செயலிழப்பால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைச் சரிசெய்யத் தேவையான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அறிவித்துள்ளது மைக்ரோசாஃப்ட் நிறுவனம்.
விமானச் சேவை கணினி கட்டமைப்பு பாதிக்கப்பட்டதன் காரணமாக, பல நாடுகளின் விமான நிலையங்கள் மூடப்பட்டு பல விமானங்கள் தரையிறக்கப்பட்டுள்ளன.
பிரித்தானியாவின் சில ஊடகங்கள் செயலிழந்துள்ளன.
லண்டன் பங்குச் சந்தையும் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அவுஸ்திரேலியாவின் தொலைத்தொடர்புகள் துறை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.