வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பதாக கூறி ஏமாற்றிய நபரை தாக்கி அவரிடம் இருந்து 05 இலட்ச ரூபாய் பணத்தினை பறிமுதல் செய்த குற்றச்சாட்டில் சகோதரர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (06.08.24) மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய போது இருவரையும் எதிர்வரும் 13ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர், பிரான்ஸ் நாட்டிற்கு செல்வதற்காக நீர்கொழும்பு பகுதியை சேர்ந்த நபர் ஒருவரிடம் 25 இலட்ச ரூபாய் பணத்தினை வழங்கியுள்ளார்.
பணத்தினை பெற்றுக்கொண்ட நபர் சிங்கப்பூருக்கு அழைத்து சென்று விட்டு, மீண்டும் இலங்கை அழைத்து வந்துள்ளார்.
மீண்டும் பிரான்ஸ் நாட்டிற்கு அனுப்பி வைப்பதாக நீண்ட நாட்களாக ஏமாற்றி வந்த நிலையில், நீர்கொழும்பை சேர்ந்த நபர் யாழ்ப்பாணம் வந்திருந்த வேளை, அதனை அறிந்த பாதிக்கப்பட்ட இளைஞனும் , அவரது சகோதரனும் நீகொழும்பு வாசியுடன் முரண்பட்டு, அவரை தாக்கி அவரிடம் இருந்து 05 இலட்ச ரூபாய் பணத்தினை பறிமுதல் செய்துள்ளனர்.
தாக்குதலுக்கு இலக்கான நபர், மானிப்பாய் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து, முறைப்பாட்டின் பிரகாரம் தாக்குதல் நடாத்திய சசோதரர்கள் இருவரையும் கைது செய்து , விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்திய வேளை, இருவரையும் விளக்கமறியில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளது.