நவீன காலத்து ஈழத்து ஓவிய உலகின் ஆச்சரியந்தரும் ஓவியப் படைப்பாளி அ.மாற்கு அவர்கள். ஓவிய உலகின் உருவாக்கமான ஓவியர் அ.மாற்கு அவர்கள் நவீன ஓவிய உலகின் தராதரங்களாலும்;; வரன்முறைகளாலும் கட்டுப்படுத்தமுடியாத ஓவிய ஆளுமையாகத் திகழ்ந்திருப்பதை அவரது வாழ்க்கைக் காலப் படைப்புகள், செயற்பாடுகள் வெளிப்படுத்தி நிற்கின்றன.
அ.மாற்கு அவர்கள் தான் வாழ்ந்த சூழலையும், சூழ்நிலைமைகளையும் தனது கைக்கெட்டும் சாதனங்களை வைத்து சாதித்திருப்பதை அவரது படைப்புகள் வெளிப்படுத்தி நிற்கின்றன. அவர் தனது படைப்பாக்கங்களுக்கான சாதனங்களுக்காகக் காத்திருந்ததில்லை, அங்கலாய்ந்திருந்ததில்லை.
இந்தத் திறந்த, பரந்த, துணிந்த தன்மை கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலான வடபுல ஈழத்தமிழர்களது வாழ்வின் சவால்களைப் பார்வைக்கும், பகிர்விற்கும் அதன்வழியான பொது உரையாடலுக்குமான கலை ஊடகங்களாகவும், அடையாளங்களாகவும் பதிவாக்கியிருக்கின்றன. காலங்கடந்த வாழ்விற்குரியதான உணர்வுபூர்வமானதும், அறிவுபூர்வமானதுமான விடயப்பரப்பாக ஆக்கப்பட்டிருக்கின்றன.
அசாதராரணமான ஓவியங்களை எவரும் எதிர்பாராத வகையிலான வெகு சாதரணமான சாதனங்களில் படைத்துக் கொண்டே இருந்தமை ஓவியர் மார்க்குவின் வாழ்க்கையாக இருந்தது.
காலம் அவரது கைக்கு கிடைக்கச் செய்த எதனிலும் படைப்பை நிகழ்த்திச் சென்றிருக்கிறார். உயிரை வாங்க விழுந்து வெடித்த செல் சிதைவுகளில் இருந்து சிற்பங்களை உருவாக்குவதும் அவரது இயல்பாக இருந்தது. தராதரமான நீண்ட ஆயட்காலம் கொண்ட ஊடகங்களுக்காக அவர் அங்கலாய்த்துக் கிடக்கவில்லை. அனர்த்த காலத்தை எதிர்த்து கணந்தோறும் எதிர்வினையாற்றிய ஓவியக் கலைஞர் அவர்.
ஓவியர் அ.மாற்கு அவர்களின் இந்தத் திறந்த பரந்த துணிந்த தன்மை பெரிதும் கவனத்திற்படாததும், நுண்ணிதானதுமான விடயங்களைப் பரந்து விரிந்த தளங்களில் உரத்துப் பேச வைத்திருக்கின்றன.
அன்றாட வாழ்வின் இடையறாத தொழிற்பாடாகவும்; புதிய புதிய ஆக்கமுறைகள் உத்திமுறைகளின் எதிர்பாராத சாதனப் பயன்பாடு என்பவற்றின் ஆற்றல் வெளிப்பாட்டுக் களங்களாக ஓவியர் அ.மாற்கு அவர்களது ஓவிய இயக்கம் அமைந்திருப்பதைக் காணமுடியும்.
ஓவியர் அ.மாற்கு அவர்களது ஓவியப் பயணம் தனிமனிதன் சார்ந்ததாக இருந்ததில்லை. அது ஓவியர் குழாமின் இணைந்த இயக்கமாக அவரது மாணவர்களுடன் இணைந்து ஏனைய ஓவியக் கலைஞர்களை இணைத்து மற்றும் பல்துறை அறிஞர், கலைஞர், இளைஞருடன் சேர்ந்து இயங்கியதாக இருக்கிறது.
ஓவியர் அ.மாற்கு அவர்கள் வாழ்ந்த இடங்களில் எல்லாம், விபத்தின் பின் சக்கர நாற்காலியில் நகர்ந்த நிலையிலும் அவரது ஓவிய உருவாக்கமும், மாணவர் உருவாக்;கமும் ஓயாது நிகழ்ந்து வந்திருப்பதைக் காணமுடியும்.
ஓவியர் அ.மாற்கு அவர்களின் வரன்முறை கடந்த ஓவிய ஆக்கமுறைகளும், அணுகுமுறைகளும் நிகழ்காலத்தின் யதார்த்தத்தை உணர்ந்து இயங்கிய, வாழ்ந்த மனிதரின் பெரும் சிறப்பியல்பாகும்.
இத்தகைய சிறப்பியல்பு கொண்ட மனிதரின் இயக்கமானது போர், இடப்பெயர்வு, முற்றுகை வாழ்வு, பொருளாதாரத்தடை என்பவற்றைப் பொருட்படுத்தாத ஒன்றாக அமைந்தது. அத்தகைய நிலைமையின் நெருக்குவாரத்துள் வாழ்ந்துகொண்டு ஈழத்தமிழ் கூறும் நல்லுலகெல்லாம் அவர்களது மாணவர் பரம்பரையின் ஓவியச் செயற்பாடுகள் மூலம் ஈழத்திலும், புலம்பெயர் நாடுகளிலும், ஈழத்திலும் புலம்பெயர் நாடுகளது சமூக அரசியல் பண்பாட்டு இயக்கங்களின் ஓவிய அதிர்வுகள் வலுவாக ஏற்பட்டுக் கொண்டிருப்பதற்கான மூலச்சக்தி ஓவியர் அ.மாற்கு அவர்கள் திகழ்ந்தார்.
யாழ்ப்பாணத்திலுள்ள குருநகரில் அமைந்துள்ள வீட்டின் சிறியதொரு வீட்டு முன்றலில் இருந்தும் பின்நாட்களில் வன்னியிலும், நிறைவாக மன்னாரிலும் பலரையும் இணைத்த தனிமனித ஓவியப் பயணத்தின் உலகந்தழுவிப் பரந்து விரிந்து செல்லும் எதனையும் எதிர்கொள்ளும் எதிலும் தங்கியிராத இயக்கந்தான் ஓவியர் அ.மாற்கு அவர்களுடையது. மாற்குவின் ஓவியப் பயணம் அவராலும் அவருடன் இணைந்த மாணவர்களாலும் ஆர்வலர்களாலும் திட்டமிடப்பட்டு தீர்மானிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டவை.
முற்றுமுழுதாக கலைஞர் மைய பயணமாக அமைந்ததன் காரணமாக அதன் கலை வெளிப்பாடுகளான ஓவியங்களும் அந்தக் கலைஞர்கள் நோக்கிலானதாக அமைந்திருப்பது முக்கிய படிப்பினைக்குரியது. இதையொத்த சமாந்தரக் கலைப்பயணத்தை குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்களது மூப்பிலான ஈழத்து நாடக அரங்க இயக்கத்திலும் காணமுடியும்.
எங்கள் வளத்தில் எங்கள் பலத்தில் எங்கள் தளத்தில் எங்கள் நோக்கில் நாங்கள் நின்றோம், முன்சென்றோம் என்ற வகையிலான படிப்பினைக்குரிய பயணம் இது.
அ.மாற்கு அவர்களது வியக்க வைக்கும் பயணம் குவியப்படுத்தப்பட வேண்டியது. அவரது படைப்பின் பொருள் மட்டுமல்ல படைப்பின் ஊடகங்களும்;; படைப்பாக்க முறைமைகளும் வியம்பப்படுத்தப்பட வேண்டியது. அ.மாற்கு அவர்களே வியம்பத்தக்க செய்தியாகி நிலைநிற்கின்றார். மாற்குவியம் என்பது இதுதான்.
சி.ஜெயசங்கர்