இன்றைய தினம் மாலை 2.30 மணியளவில் கனிய மணல் ஆராய்ச்சிக்காக குழு ஒன்று நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட வங்காலை கிராமத்தில் ஆராய்ச்சிக்காக சென்றுள்ளனர். -கிராமத்தில் உள்ள எந்த தரப்பிடமும் எவ்வித அனுமதியும் பெற்றுக்கொள்ளாமல் சுமார் 20 பேர் அடங்கிய குழுவினர் அவ்விடத்திற்கு சென்று கனிய மண் ஆராய்ச்சியை முன்னெடுத்தனர்.
இந்த நிலையில் சந்தேகம் கொண்ட கிராம மக்கள் அவ்விடத்திற்கு சென்று அவர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்த போது, தாம் பல்கலைக்கழகத்தில் இருந்து வருகை தந்துள்ளதாகவும்,கனிய மண் ஆராய்ச்சியை மேற்கொண்டு ஆராய்ச்சி வெற்றி பெற்றால் கனிய மணல் அகழ்வு முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் அக்கிராம மக்கள் உடனடியாக வங்காலை பங்குத்தந்தை அருட்தந்தை லக்கோன்ஸ் அடிகளாரின் கவனத்திற்கு கொண்டு வந்த நிலையில் அருட்தந்தை சம்பவ இடத்திற்கு சென்றுள்ளாா்.
ஆராய்ச்சிக்காக சென்ற குழுவுடன் ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரி ஒருவரும் உள்ளடங்கிய நிலையில் தாங்கள் உரிய அனுமதியை பெற்று கொண்டு வந்ததாக தெரிவித்த போதும் எவ்வித அனுமதியும் பெற்றுக் கொள்ளாமல் அவர்கள் வருகை தந்தமை தெரிய வந்துள்ளது.