Home இந்தியா இந்தியர்களை அவமதித்த அமெரிக்க அரசின் ஆணவச் செயலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

இந்தியர்களை அவமதித்த அமெரிக்க அரசின் ஆணவச் செயலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

by editorenglish

நாளை சென்னையில் அமெரிக்க அரசின் ஆணவச் செயலைக் கண்டித்து முத்தரசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடா்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

கடந்த ஜனவரி 20 ஆம் திகதி அமெரிக்க அரசு தலைவர் பொறுப்பேற்ற டொனால்ட் டிரம்ப், இந்தியாவுக்கும், இந்தியர்களுக்கும் எதிரான நடவடிக்கைகளை தீவிரமாக்கி வருகிறார். இந்த மாத தொடக்கத்தில் குஜராத், ராஜஸ்தான், அரியாணா மாநிலங்களை சேர்ந்த 104 இந்தியர்கள் கைகள், கால்களில் விலங்கிட்டு, ராணுவ விமானத்தில் ஏற்றி, பஞ்சாப் அமிர்தசரஸ் விமானம் நிலையத்திற்கு கொண்டு வந்து விட்டுச் சென்றுள்ளனர்.

அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யும் அனைத்துப் பொருட்களின் மீதும் அவர்கள் விருப்பப்படி, இந்தியாவில் இறக்குமதி வரி விதிக்க வேண்டும் என நிர்பந்தித்து வருகிறார். பாஜக ஒன்றிய அரசும் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இருசக்கர வாகனங்கள், செயற்கை சுவையூட்டிகள் மீதான இறக்குமதி வரியை வெகுவாக குறைத்து தனது ஏகாதிபத்திய விசுவாசத்தை காட்டியுள்ளது.

அங்கீகரிக்கப்படாத குடியேறிகளுக்கும், தற்காலிக விசாவில் அமெரிக்கா செல்பவர்களுக்கும், அங்கு குழந்தைகள் பிறக்கும் போது, அந்தக் குழந்தைகளுக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கி வந்த நடைமுறையை கடந்த ஜனவரி மாதம் டிரம்ப் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். புலம் பெயர்ந்து செல்வோர் மற்றும் அடைக்கலம் புகுந்தோர்களின் சர்வதேச சட்டங்களை அமெரிக்க அரசு அப்பட்டமாக மீறி வருகின்றது.

இரண்டாவது முறையாக அதிகாரத்தை கைப்பற்றியுள்ள டொனால்டு டிரம்ப் அதிகார மமதையில், ஆவணத் திமிரோடு, இந்தியர்கள் மீது எதிர் நடவடிக்கைகளை தீவிரமாக்கி வருவதை நாடாளுமன்றத்தின் கவனத்துக்கு தெரிவிக்கும் போது, அயலுறவுத்துறை அமைச்சர் அமெரிக்காவிற்கு ஆதரவாக பேசுகிறார். உரிய ஆவணங்கள் இல்லாமல் இருப்பவர்களை வெறியேற்றும் போது, கை, கால்களில் விலங்கு போடுவது 2012 முதல் வழக்கத்தில் உள்ள நடைமுறை தான் என்று கூறுகிறார்.

அமெரிக்க அரசின் ஆணவச் செயலையும், அதனை ஆதரித்து பேசும் மத்திய அரசின் நிலையினையும் கண்டித்து நாளை 14.02.2025 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் முத்தரசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

அமெரிக்க அரசின் ஆணவச் செயலைக் கண்டித்து நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் பங்கேற்று ஆதரிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More