மன்னார் கடல் பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 4 இந்திய மீனவர்களை எதிர்வரும் 7 ஆம் திகதி வரை (07-03-2025) விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் இன்று வியாழக்கிழமை (20) உத்தரவிட்டார்.
தமிழ்நாடு மாநிலம் ராமேஸ்வரம் காந்திநகர் பகுதியை சேர்ந்த 4 மீனவர்கள் படகொன்றில் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட போது இன்று வியாழன் அதிகாலை தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட குறித்த 4 இந்திய மீனவர்களும் விசாரணைகளின் பின்னர் மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு மேலதிக விசாரணைகளின் பின்னர் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் அவா்களை எதிர்வரும் 7 ஆம் திகதி வரை(7-03-2025) விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

