280
உரிமையுடன் கூடிய வாழ்வு எண்ணிக்கையில் சிறுபான்மை மக்களுக்கும் உரியவையே!
தங்களது வாழ்வுரிமைக்காக, நிலவுரிமைக்காக, மொழியுரிமைக்காக, பண்பாட்டு உரிமைக்காக, மரபுரிமைக்காக எனப் பல்வேறு வழிவகைகளிலும் குரல் கொடுத்து வரும் பெரும்பான்மை, சிறுபான்மை என்ற அடையாளப்படுத்தல்களுடன் இலங்கையில் இனங்கள் வாழ்ந்து வருகின்றன.
இந்தக் குரல்கள் வெறுப்புக் குரல்களாக மூர்க்கம் கொள்ளும் நிலைமைகளின் மாற்றத்திற்கான தடங்கள் அருந்தலாகவே காணப்படுகின்றன.
இந்நிலையில் இலங்கையில் வாழும் எண்ணிக்கையில் சிறுபான்மை மக்களான வேடர்கள், பறங்கியர்கள், மலே இன மக்கள், ஆபிரிக்க வழிவந்த மக்கள், குறவர்கள் என்றழைக்கப்படும் தெலுங்கு பேசும் மக்கள் பற்றிய சிந்தனை இல்லாத நிலையே பிரதான ஓட்ட சிந்தனைப் பரப்பில் காணப்படுகின்றது.
போர், இடப்பெயர்வு, பொருளாதாரத் தடை, இயற்கை அனர்த்தங்கள் மேற்படி எண்ணிக்கையில் சிறுபான்மை மக்களது தனித்தன்மைகளை கவனத்திலெடுக்காத ஏற்றுக்கொள்ளாத அரச நீதி நிர்வாக நடைமுறைகள் என்பவை மேற்படி மக்களது இயல்பு வாழ்க்கையை மிகவும் பாதிப்படையச் செய்வதை காணமுடியும்.
எண்ணிக்கையில் சிறுபான்மையின மக்களது முறையிடுவதற்கு முடியாத நிலை அல்லது முறையிட்டும் பலன் கிடைக்காத நிலை என்பது பேசாப்பொருளாகவே இருந்து வருகின்றது. போர், இடப்பெயர்வு, இயற்கை அனர்த்தம் காரணமாக புவியியல் ரீதியாக, சமூக ரீதியாக, பண்பாட்டு ரீதியாக சிதறடிக்கப்பட்ட அவர்களது வாழ்க்கை நிலையின் இழப்பும் அழிவும் அவர்களுக்கு மட்டுமானதல்ல. முழுச்சமூகங்களுக்கானது என்பதும் விளங்கிக் கொள்ளப்பட வேண்டியது.
பல்லின, பன்மொழி, பல்பண்பாட்டு, பல்அறிவுருவாக்க, பல்படைப்புருவாக்கம் என பன்மை நிலைமை என்பதன் பலம் பொருளாதார வளப்பெருக்கத்துடன், தற்சார்பு வாழ்வுடன் தொடர்புடையது என்பது விளங்கிக் கொள்ளப்பட வேண்டியது.
சமகால உலகின் அழிவுசார் சவால்களை எதிர்கொள்ளும் முகமாகப் பழங்குடி மக்களின் அறிவும் திறனும் வேண்டப்படுவதும், தேடப்படுவதும் புதிய அறிவு நிலையாக உருவாகியிருக்கிறது.
இந்த அறிவார்ந்த நிலைமைகள் கவனத்திற் கொள்ளப்படாமல் மேற்படி எண்ணிக்கையில் சிறுபான்மை மக்களது கையறு நிலைமைகளை வாய்ப்பாகக் கொண்டு இனரீதியாக, மதரீதியாக, மொழிரீதியாக அழிப்புச் செய்து சுற்றிவாழும் பெருஞ்சமூகங்களால் பண்பாட்டு விழுங்குதல்கள் மேற்படி மக்களின் எதிர்ப்புக்களுக்கும் மத்தியில் சத்தமற்ற வகையில் நிகழ்த்தப்பட்டு வருகிறது.
தங்களது உரிமைகளுக்காக குரல் கொடுப்பவர்களே மறுபக்கத்தில் உரிமை மறுப்பாளர்களாகவும் இருப்பது யதார்த்தமாக இருக்கிறது.
இந்நிலையில் மேற்படி மக்களது குரல்களுக்கான அவர்களது இடத்தை உறுதிப்படுத்துவதும்; அவர்களின் கருத்துக்களுக்கு இணங்க அவர்களது சமூகம், பண்பாட்டு, புவியியல் தனித்துவம் பேணப்படுவதற்கான பண்பாட்டு அரசியல் உருவாக்கம் இடம்பெறுவதும் அவசியம்.
சமூகங்களாக வாழ்வதற்குரிய அவர்களது இடங்கள் அவர்களது மொழியை, பண்பாட்டை, அறிவுருவாக்கத்தை நடைமுறையில் வைத்திருப்பதற்கான அடிப்படையாகும்.
பன்மைத்துவத்தை மதிப்பதும், கொண்டாடுவதும் சமூகப் பண்பாட்டு விடயங்களுடன் மட்டுப்பட்டவை அல்ல. அவை தன்னிறைவான வாழ்வுடனும் தொடர்புடையவை.
Spread the love