Home இந்தியா மாணவி தற்கொலை- நீட்டை நீக்குவதாக நாடகம் நடத்தியவர்களே பொறுப்பு

மாணவி தற்கொலை- நீட்டை நீக்குவதாக நாடகம் நடத்தியவர்களே பொறுப்பு

by editorenglish

தற்கொலை செய்து கொண்ட மாணவியின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் தோல்வியடைந்து விடுவோம் என்ற அச்சம் காரணமாக, விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தையடுத்த தாதாபுரம் கிராமத்தைச் சேர்ந்த இந்து என்ற மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். மாணவி இந்துவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாணவி இந்து கடந்த ஆண்டும் நீட் தேர்வு எழுதினார். அதில் 350 மதிப்பெண் எடுத்த நிலையில் அவரால் மருத்துவக் கல்லூரியில் சேர முடியவில்லை. நடப்பாண்டிலாவது மருத்துவப் படிப்பில் சேர்ந்து விட வேண்டும் என்பதற்காக தீவிரமாக படித்து வந்தார். வரும் மே 5-ஆம்  திகதி நடைபெறவுள்ள நீட் தேர்வுக்கு வரும் 7-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்பதால் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்த போது, இந்த ஆண்டும் நமக்கு வெற்றி கிடைக்காதோ என்ற அச்சத்தில் அவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

இந்து அரசு பள்ளியில் படித்தவர். 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெற்றுள்ளார். ஆனாலும் நீட் தேர்வில் அதே அளவு மதிப்பெண்களைப் பெற முடியவில்லை. இத்தகைய கிராமப்புற மாணவிகளின் மருத்துவக் கல்வி கனவுக்கு நீட் தேர்வு தடையாக இருக்கிறது என்பதால் தான் அத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், அதை செய்ய மத்திய அரசு மறுக்கிறது.

2017-ஆம் ஆண்டில் நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்ட பிறகு இதுவரை தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 50 பேர் உயிரிழந்திருக்கின்றனர். தமிழ்நாட்டில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அடுத்த நாளே நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று வரை நீட் தேர்வை ரத்து செய்யவில்லை. மாணவ, மாணவிகள் மத்தியில் தவறான நம்பிக்கையை ஏற்படுத்திய அவர்கள் தான் மாணவி இந்துவின் தற்கொலைக்கு பொறுப்பேற்க வேண்டும்.

மருத்துவக் கல்வியின் தரத்தை அதிகரிக்கவோ, மருத்துவக் கல்வி வணிகமயமாவதைத் தடுக்கவோ நீட் தேர்வு எந்த வகையிலும் உதவவில்லை என்பதை கடந்த 8 ஆண்டுகால புள்ளிவிவரங்களில் இருந்து மத்திய அரசு அறிந்து கொள்ள வேண்டும். எதார்த்தத்தை உணர்ந்து நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். நீட் தேர்வு விவகாரத்தில் மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த திமுக, வாக்குறுதியை நிறைவேற்றும் நோக்குடன் நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்கொலை செய்து கொண்ட மாணவியின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More