Home இலங்கைமுஸ்லிம் சமுகத்திலும் திருமண வயதை 18 ஆக்க உடன்பாடு

முஸ்லிம் சமுகத்திலும் திருமண வயதை 18 ஆக்க உடன்பாடு

by editorenglish

முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத் திருத்தத்தில் திருமண வயதை 18 ஆகத் திருத்தம் மேற்கொள்ளவும் முஸ்லிம் பெண்களுக்கும் தங்களின் விவாகச் சான்றிதழில் கைச்சாத்திடும் உரிமை இருக்க வேண்டும்  என்பதிலும் முஸ்லிம் சமூகத்தில் உடன்பாடு இருக்கிறது என புதிய ஜனநாயக முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று சனிக்கிழமை (08/03/2025) நடைபெற்ற 2025ஆம் ஆண்டுக்கான  வரவு செலவுத் திட்டத்தின்    குழுநிலை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம் 1951ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. என்றாலும் தற்போது காலத்துக்கு ஏற்றவகையில் அதில் திருத்தங்களை மேற்கொள்ள நீண்டகாலமாகக் கலந்துரையாடி வருகிறோம். அதுதொடர்பான குழுவொன்றும் நியமிக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சட்டத்துக்குத் தேவையான திருத்தங்களைக் கொண்டுவரத் தவறியமைக்கு நாங்கள் இதற்குப் பொறுப்புக்கூற வேண்டும். திருத்தங்களை மேற்கொள்ளும்போது ஒருசில விடயங்களில் கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன.

குறிப்பாக திருமண வயது தொடர்பில் நாட்டில் இருக்கும் பொதுவான சட்டம் 18 வயதாகும். முஸ்லிம் சமுகத்திலும் திருமண வயதை 18 ஆகத் திருத்துவதற்கு உடன்பாடு இருக்கிறது. அதேபோன்று விவாகச் சான்றிதழில் கையெழுத்திடுவது பெண்களின் உரிமை. முஸ்லிம் பெண்களுக்கும் தங்களின் விவாகச் சான்றிதழில் கைச்சாத்திடும் உரிமை இருக்க வேண்டும். இந்தத் திருத்தத்தை மேற்கொள்ளச் சமூகத்தில் உடன்பாடு இருக்கிறது. காதி  நீதிமன்றங்களில் பெண்களும் அதில் நீதிபதியாக வருவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என்றார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More