கடந்த 2008அம் ஆண்டு சிறுமி ஒருவரை போலியான பிறப்புச் சான்றிதழ் மற்றும் தேசிய அடையாள அட்டை தயாரித்து, ஜோர்தானில் உள்ள ஒரு வீட்டிற்கு பணிப்பெண்ணாக அனுப்பியதாகக் கூறப்படும் பிரதிவாதிக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று 12 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையும் 25,000 ரூபாய் அபராதமும் விதித்து தீா்ப்பளித்துள்ளது.
மேலும் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணுக்கு மூன்று லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், அபராதம் செலுத்தப்படாவிட்டால், மேலும் ஒன்றரை ஆண்டுகள் தளர்த்தப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவி்ட்டுள்ளது.
கல்முனைப் பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான அப்துல் காதர் சரீப் என்பவருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமி ஜோர்தான் சென்ற இரண்டு மாதங்களுக்குள் அவர் பணிபுரிந்த வீட்டுக்காரர்களால் சித்திரவதைக்கு ஆளானதாகவும், பின்னர் அவர் தாய் நாட்டிற்கு திரும்பியதாகவும் நீதிபதி சுட்டிக்காட்டினார்.
2008ஆம் ஆண்டு நாட்டுக்கு திரும்பிய இந்த சிறுமி தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து ஒன்பது ஆண்டுகளுக்குப் பின்பே குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிரான இந்தக் குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது எனவும், இந்தத் தீர்ப்பை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவருக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதி தனது தீர்ப்பில் உத்தரவிட்டு்ள்ளாா்.

