திவுலங்கடவல ஜனாதிபதி கல்லூரி மைதானத்தில் நேற்று (14) இரவு நடைபெற்ற இசை நிகழ்ச்சியின் இடையே கலவரம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த நிகழ்ச்சியில் பங்கேற்பதாக அறிவித்திருந்த இரண்டு பாடகர்கள் கலந்து கொள்ளாத காரணத்தால் அங்கு குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இசை நிகழ்ச்சி பாடகர்கள் குழு பங்கேற்புடன் நடைபெறும் என்று ஏற்பாட்டாளர்கள் விளம்பரப்படுத்தியதோடு, 1,000 மற்றும் 2,500 ரூபாவுக்கு டிக்கெட்டுகளை விற்கவும் நடவடிக்கை எடுத்திருந்தனர். எனினும் நேற்றிரவு இசை நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்ட போதிலும் பங்கேற்க திட்டமிடப்பட்ட இரண்டு பாடகர்கள் சமூகமளிக்கவில்லை.
ந்தநிலையில் அறிவிப்பாளர் அதிகாலை 1.30 மணியளவில் இசை நிகழ்ச்சி முடிவடைவதாக அறிவித்தமையினால் ஆத்திரமடைந்த பார்வையாளர்கள் நிகழ்ச்சிக்காக வைக்கப்பட்ட நாற்காலிகள் உட்பட சொத்துக்களையும், இசைக்குழுவினரின் இசைக்கருவிகளையும் தாக்கி சேதப்படுத்தியுள்ளனர்.
சம்பவ இடத்தில் சுமார் 45 காவல்துறையினா் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தாலும், அவர்களால் நிலைமையைக் கட்டுப்படுத்த முடியவில்லை என தொிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான விசாரணையில், வாக்குறுதியளித்த தொகையை இசை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் செலுத்தாததால், சம்பந்தப்பட்ட இரண்டு பாடகர்களும் இசை நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்பது தெரிய வந்துள்ளதாக மெதிரிகிரிய காவல்துறையினா் தொிவித்துள்ளனா்.