வெலிக்கடை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்ததாக கூறப்படும் நிமேஷ் சத்சர என்ற இளைஞனின் மரணம் தொடர்பான நீதவான் விசாரணையின் சாட்சியங்களின் விசாரணைகளை, மே 16 ஆம் திகதி முதல் ஆரம்பிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (30) உத்தரவிட்டுள்ளது
மேலும் குறித்த விசாரணையில் சாட்சியமளிக்க அன்றைய தினம் ஐந்து சாட்சியாளர்களை நீதிமன்றத்தில் முன்னிலையாக அழைப்பாணை விடுக்குமாறும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவின்படி, இறந்த இளைஞனின் உடல் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டதாக நீதிமன்றத்திற்கு அறிவித்த குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் ,
மூவர் அடங்கிய வைத்திய குழுவால் சடலம் மீண்டும் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தியதாகவும், அதன் முதற்கட்ட அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் தொிவித்துள்ளனா்.
இந்த பிரேத பரிசோதனையின் போது எடுக்கப்பட்ட இறந்தவரின் உடலின் சில பாகங்கள் பிரதான சட்ட வைத்திய அதிகாரிக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினா் தெரிவித்தனர்.
அதன்படி, இந்த மரணம் தொடர்பான நீதவான் விசாரணையின் போது இருபத்தி இரண்டு சாட்சியாளர்களிடமிருந்து சாட்சியங்களைப் பதிவு செய்ய எதிர்பார்ப்பதாகவும், அதில் ஐந்து சாட்சியாளர்களுக்கு அடுத்த வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்குமாறும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் நீதிமன்றத்தைக் கோரினர். இந்தக் கோரிக்கையைப் பரிசீலித்த நீதவான், அந்த சாட்சியாளர்களை வரும் 16 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்குமாறு உத்தரவிட்டார்.

