Home இலங்கைகாரைக்காலில் கழிவுகள் கொட்டும் செயற்பாட்டை நிறுத்த பணிப்பு

காரைக்காலில் கழிவுகள் கொட்டும் செயற்பாட்டை நிறுத்த பணிப்பு

by admin
காரைக்கால் திண்மக் கழிவகற்றல் நிலையத்தில் புதிதாக கழிவுகளைக் கொட்டுகின்ற செயற்பாடுகள் அனைத்தும் முற்றாக நிறுத்தப்படும் என நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் ப. மயூரன் தெரிவித்துள்ளார்.
நல்லூர் பிரதேச சபையின் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டதை அடுத்து உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
நாம் வாழும் இச் சமூக ஒழுங்கில் சவால்களையும் நெருக்கடிகளையும் சந்திப்பது ஒரு சாதாரண விடயம். ஆனால் அவ் சவால்களையும் நெருக்கடிகளையும் எதிர்கொண்டு பயணிக்கும் திசையறிந்து பயணிப்பதே மிகக் கடினமான விடயம்.

அந்தவகையில் அந்த கடினமான விடயத்தினை மீண்டும் ஒரு முறை சாத்தியமாக்கும் வகையில் நல்லூர் பிரதே சபையின் தலைமைப் பதவியினை ஏற்றிருக்கின்றேன். அதற்கு ஆதரவளித்த அத்தனை பேருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகளை இவ்விடத்தில் கூற கடமைப்பட்டுள்ளேன்.

எப்போதும் ஒரு இடத்தில் இருந்து அடுத்த இடத்தினை நோக்கி பயணிப்பதற்கு எமக்கு கிடைத்த பாதை என்பது எமக்கு கிடைக்கின்ற வாய்ப்பு என்பதனையும் தாண்டி அது எமக்கு கிடைத்துள்ள பொறுப்பு என்பதனை ஏற்றுக்கொள்பவர்களாளேயே நாம் வாழுகின்ற பிரதேசத்தினையும் அதன் மக்களையும் அடுத்தடுத்த படிகளை நோக்கி  அழைத்து செல்லக் கூடியதாக இருக்கும். அதனை என் நெஞ்சில் நிறுத்தியே 2021 முதல் 2023 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் பயணித்தோம். அதே போலானதொரு சந்தர்ப்பத்தினையும் பொறுப்பினையும் இயற்கை மீண்டும் எமக்கு தந்துள்ளதுடன் கடந்த காலத்தை விட மிக வேகமாகவும் விவேகமாகவும் பயணிக்க வேண்டியதன் தேவையினையும் உணர்த்தி நிற்கின்றது.

அப் பொறுப்பினை சிரமேற்கொண்டு நல்லூர் பிரதேச சபையின் உட்கட்டுமான வசதிகளை மேம்பாடுத்துவதிலும் நல்லூர் பிரதேச சபையினை தூய்மையான அழகிய நகராக மாற்றுவத்திலும் எனது கவனம் இருக்கும் அத்துடன் அப் பிரதேச வாழ் மக்களின் அடிப்படை தேவைகளான திண்மக்கழிவகற்றல், வீதிகள் மின்விளக்குகள் வடிகாலமைப்பு போன்ற பல தேவைகளை முன்னகர்த்துவதற்கும் நல்லூர் பிரதேச சபையினை ஒரு நகரசபையாக மாற்றுவதற்கும் என்னுடைய இந்த காலப்பகுதியில் நான் உங்கள் அனைவருடனும் இறுகக் கைகோர்த்து அயராது உழைப்பேன். இது என் வாக்குறுதி என்பதற்கு அப்பால் என் மனவுறுதியும் கூட.அண்மைக்காலமாக காரைக்கால் திண்மக்கழிவகற்றல் இடத்தில் நடைபெறுகின்ற சமூக சீர்கேடான மற்றும் சமூக விரோத செயல்கள் தொடர்பிலும் கவனம் செலுத்துகின்றேன். எமது கடந்த ஆட்சிக்காலத்தின் இறுதிக் காலகட்டத்தில் குறித்த இடத்தினை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் என்னால் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் குறுகிய காலத்தில் அவை செயல் வடிவம் பெறவில்லை.

இந் நிலையில் நான் மீண்டும் நல்லூர் பிரதே சபையின் தவிசாளராக பதவியேற்றுள்ள இன்றைய நாளிலிருந்து  மிக விரைவில் காரைக்கால் திண்மக் கழிவகற்றல் நிலையத்தில் புதிதாக கழிவுகளைக் கொட்டுகின்ற செயற்பாடுகள் அனைத்தும் முற்றாக  நிறுத்தப்படும் அத்துடன் எதிர்வரும் காலங்களில் அங்கிருக்கின்ற கழிவுகள் படிப்படியாக அகற்றப்பட்டு அப்பிரதேசத்தின் தன்மை பாதுகாக்கப்படுவதுடன் காரைக்கால் திண்மக் கழிவகற்றலுக்கு ஒதுக்கப்பட்டுள்ள அப் பகுதி சபையின் வேறு தேவைகளுக்கு பயன்படுத்தப்படும் என்ற உறுதி மொழியினையும் இங்கு தருகின்றேன்.

மாற்றத்தையும் ஏற்றத்தையும் வரவேற்றும் எதிர்பார்த்தும் நடந்து முடித்த தேர்தலில் நம்பிக்கையுடன் எமக்கு ஆதரவளித்த அத்தனை பேருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் நன்றி கூறுவதோடு நம்பிக்கையோடு நல்லூர் பிரதேச சபையின் தலைவர் பதவிக்கு என்னை தெரிவு செய்த தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் நீதியரசர் க.வி.வினேஸ்வரன் அவர்களுக்கும் எந் நிலையிலும் எல்லாச் சந்தர்பங்களிலும் எனக்கு வழிகாட்டும் ஒரு நண்பனாக இருக்கும் தமிழ் மக்கள் கூட்டணியின் உப செயலாளர் சட்டத்தணி மணிவண்ணன் அவர்களுக்கும் எனது நன்றிகளை இச் சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன். எந்த ஒரு கட்சி அரசியல் பாகுபாடுமின்றி இச் சபையின் எல்லா உறுப்பினர்களும் தங்களுடைய மக்களைப் பிரதிநிதித்துப்படுத்து கின்றவர்கள் என்பதனை அடிப்படையாகக் கொண்டு அவர்கள் அனைவருடனும் இணைந்து நல்லூர் பிரசேத்தின் தன்மையறிந்து அதன் மக்களின் மனமனறிந்து தேவையறிந்து ஒற்றுமையாக பணியாற்றுவோம்.

இயற்கை எம் மீது சுமத்தியிருக்கும் இப் பொறுப்பினை நன்குணர்ந்து வரலாற்றினை ஏற்றமிகு ஒன்றாக மாற்றும் தருணமும் இதுவென்று உணர்ந்து கொண்டு எமது மண்ணுக்காகவும் மொழிக்காகவும் எமக்காகவும் இறுதிமூச்சுவரை சுதந்திர வேட்கையுடன் போராடி மனங்களில் நிலைத்து வாழ்பவர்களை நினைவில் நிறுத்தி எமது சிந்தனை மாற்றங்களால் நல்லூர் பிரதேச சபையில் புதுயுகம் படைப்போம். மக்கள் மனங்களில் நம்பிகையினை வளர்ப்போம் என தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More