📈 ஆச்சரியம் அளிக்கும் புதிய தகவல்: தமிழர்களின் வீதாசாரம் அதிகரிப்பா?
(நன்றி: குடித்தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம், இலங்கை )
அண்மையில் வெளியான இலங்கையின் 2024 குடித்தொகை கணிப்பீட்டின் அடிப்படை தகவல்கள் பலரை ஆச்சரியத்தில்
ஆழ்த்தியுள்ளது. 2012இல் 11.1% ஆக இருந்த இலங்கைத் தமிழர்கள், 2024இல் 12.3% ஆக அதிகரித்துள்ளதாக வெளியான செய்தி, இனவாதிகளின் வன்மத்தையும் அதிகரித்துள்ளது.
ஒரு இனத்தின் குடித்தொகை வீதாசாரம் அதிகரிக்க, பொதுவாக கருவளம் (பிறப்பு வீதம்) அதிகரிக்க வேண்டும், இறப்பு
வீதம் குறைய வேண்டும் அல்லது குடியேற்றம் அதிகமாக இருக்க வேண்டும். ஆனால், இலங்கைத் தமிழர்களைப்
பொறுத்தவரை, அனைத்துக் காரணிகளும் குடித்தொகை வீதாசாரத்தைக் குறைக்கும் திசையிலேயே இருக்கின்றன.
📉 வரலாற்றுப் போக்கு: வீழ்ச்சியும் முரண்பாடான மாற்றமும்
உள்நாட்டுப் போர் ஆரம்பித்த காலத்தில் இருந்து, இலங்கைத் தமிழரின் வீதாசாரம் தொடர்ச்சியாகக் குறைந்து வந்தது:
|
ஆண்டு |
இலங்கைத் தமிழர்களின் வீதாசாரம் |
முஸ்லிம்களின் வீதாசாரம் |
|
1981 |
12.7% |
7.0% |
|
2012 |
11.2% |
9.2% |
இந்த அடிப்படையில், 2031ஆம் ஆண்டு இடம் பெறப்போகும் குடித்தொகைக் கணிப்பீட்டில் முஸ்லிம்கள் இலங்கைத் தமிழர்களை
முந்திச் செல்வர் என்று நான் எதிர்வு கூறியிருந்தேன். இப்போது இந்த எதிர்வு கூறல்களுக்கு முரணாக வீதாசாரம் அதிகரித்து இருப்பது ஏன் என்பதை நாம் ஆராய வேண்டும்.
🔍 உண்மை வெளிச்சம்: அடையாள மாற்றமே அதிகரிப்பின் காரணம்
இந்த அதிகரிப்புக்குப் பின்னால் உள்ள உண்மை என்னவென்றால், குடிசன மதிப்பீட்டின் போது சேகரிக்கப்படும் தகவல்களது
உண்மைத்தன்மையானது பரிசீலிக்கப்பட்டு உறுதிப்படுத்தப்படுவதில்லை. மாறாக வாய்வழியாகக் கேட்கப்படும்
வினாக்களுக்குக்
குடியிருப்பாளர் வழங்கும் பதில்கள் நேரடியாக எவ்வித ஆதாரச் சரிபார்ப்புகளும் இன்றிக் குடிசன மதிப்பீட்டாளரால் பதிவு
செய்யப்படுவதே நடைமுறையாகும்.
இந்திய வம்சாவளித் தமிழர்களின் அடையாள மாற்றம்:
1981ஆம் ஆண்டு 5.5% ஆக இருந்த இந்திய வம்சாவளித் தமிழர்கள், அவர்களின் பிறப்பு வீதம் அதிகமாக இருந்தபோதிலும்,
தம்மைத் தொடர்ச்சியாக இலங்கைத் தமிழர்களாக அடையாளப்படுத்துவதன் காரணமாக 2012இல் 4.2% ஆகக் குறைந்தது.
2024இல்
2.8% ஆக மேலும் குறைவடைந்துள்ளது.
சில ஆய்வாளர்கள் இதை இந்திய வம்சாவளித் தமிழர்களின் கருவளத்தை வேரறுக்கும் சூழ்ச்சித் திட்டங்களால் ஏற்பட்டது
எனக் கருத்துக் கூறுகின்றனர். தற்போது வெளியாகிய குடிசனமதிப்பீட்டு அறிக்கையில் உள்ளடங்கியுள்ள பிற தகவல்கள்
மற்றும்
ஆய்வுகள் இந்திய வம்சாவளித்தமிழர்கள் தம்மை இலங்கைத் தமிழர்களாக அடையாளப்படுத்தியிருக்கலாம் என்ற
கருதுகோளினை
உறுதிப்படுத்தும் விதமாகவே காணப்படுகின்றன
தரவுகள் தெளிவுபடுத்துகின்றன:
மொத்த தமிழர்களின் வீதாசாரம்: (இலங்கைத் தமிழர்கள் + இந்திய வம்சாவளித் தமிழர்கள்)
2012இல் (11.1+4.1=15.2) ஆக இருந்தது, 2024இல் (12.3+2.8=15.1) ஆக, அதாவது வெறும் 0.1% மட்டுமே குறைந்துள்ளது.
மத ரீதியான கணிப்பீடு: இந்துக்களின் வீதாசாரம் 2012 இல் இருந்து 2024 வரை 12.6% ஆக மாறாமல் இருப்பது இந்த அடையாள
மாற்றத்துடன் ஒத்துப் போகிறது.
பிராந்திய உதாரணம் (பதுளை மாவட்டம்): 2012 இல் இலங்கைத் தமிழர்கள் 2.7% இலிருந்து 2024இல் 9.4% ஆக அதிகரித்துள்ள
அதே வேளையில், இந்திய வம்சாவளித் தமிழரின் வீதாசாரம் 18.5% இலிருந்து 11.0% ஆகக் குறைந்துள்ளது.
(நன்றி: குடித்தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம், இலங்கை)
இலங்கைத் தமிழர்கள் பதுளைக்கு இடம்பெயர்ந்தமைக்கான காரணங்களோ, ஆதாரங்களோ இல்லாத நிலையில், இந்திய
வம்சாவளித் தமிழர்கள் தம்மை இலங்கைத் தமிழர்களாக அடையாளப்படுத்தியிருந்தாலே அன்றி வேறு எந்தக் காரணியும்
மேற்குறிப்பிட்ட புள்ளிவிபரத்திற்கான விஞ்ஞானபூர்வ விளக்கமாக அமையாது
⚖️ அரசியல் சூழ்ச்சிகளும் வாக்கு வங்கி அரசியலும்
சனத்தொகை மதிப்பீட்டில் தமிழர்கள் கூறுபடுத்தப்படுதை நாம் கவனமாக இங்கு அவதானிக்க வேண்டும். அதாவது 1
981ஆம் ஆண்டு முதல் தாழ்நிலச் சிங்களவர்கள் மற்றும் கண்டியச் சிங்களவர்கள் சிங்களவர்களாக ஒன்றிணைக்கப்பட்டு கணக்கிடப்படுகிறார்கள். எனினும், ஆரம்பகாலங்களில் தமிழர்களாகக்
கணக்கிடப்பட்டவர்கள் 2012 முதல் மேலும் பல
உப பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு இலங்கை செட்டி மற்றும் பரதவர்கள் என்று திட்டமிட்டவகையில் பிரிக்கப்பட்டுக் கணக்கிடப்படுகிறார்கள்.
இந்தச் சூழ்ச்சிகளை முறியடிக்கவேண்டுமானால், 2012ஆம் ஆண்டிலேயே தமிழர்கள் “தமிழர்” என்று ஒன்றுபட்டு
தம்மை அடையாளப்படுத்த வேண்டும் என்று நான் கூறியிருந்தேன். ஆனால், அதை தமது சுயநல நோக்கங்களுக்காக,
வாக்கு வங்கி சரிந்து விடும் என்று கருதிச் சில மலையக தலைமைகள் எதிர்த்து இருந்தன.
🚨 தமிழ் அரசியல் கட்சிகள் மீதான நேரடி விமர்சனம்
தமிழர்களது இருப்பைத் தக்கவைக்கும் அடிப்படைப் பொருண்மிய மேம்பாடு குறித்துத் தமிழர்களைப்
பிரதிநிதித்துவப்படுத்தும்அரசியற் கட்சிகள் எவையும் அக்கறைப்படாதிருப்பது கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். புலிகளின் காலத்தில் அவர்கள் போரின் மத்தியிலும் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான பல திட்டங்களை
முன்னெடுத்து ருந்தார்கள்.
ஆனால் துரதிஷ்டவசமாக, பல தசாப்தங்களாகத் தமிழ் தேசியம் பேசிவரும் தமிழரசு கட்சி (ITAK) மற்றும் தமிழ் காங்கிரஸ்
அல்லது ந்திய ஐந்தாம் படையுடன் இணைந்து செயல்படும் ஏனைய தமிழ்க் கட்சிகள் மற்றும் குழுக்களுக்கோ இன்றுவரை தமிழர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வேலைத்திட்டம் எதுவும் இல்லை என்பதே பாரிய பிரச்சினையாக இருக்கிறது.
தமிழர்களுக்கு உரிமைகளைப் பெறுவதாக உணர்ச்சிகளைத் தூண்டிப் போராட்டம் நடத்துவதையும், உரிமைகளை
இழந்தமைக்கு ஏனையவர்களைக் குற்றம் சாட்டுவதையும் செய்து அடுத்த தேர்தலில் வெற்றி பெறும் இலக்கை அடைவதற்கு
முயற்சி செய்தார்களே தவிர, இதுநாள் வரையில் குறித்த அரசியல் தலைமைகள் இனத்தின் இருப்பினைக் காப்பதற்காக
ஒரு துரும்பையேனும் கிள்ளிப் போடவில்லை என்பதே நிதர்சனம்.
💡 தமிழர்களின் இருப்புக்குத் தீர்வு: பொருளாதாரத்தை கட்டியெழுப்புதல்
அதிகரித்த திருமண வயது, சீதனம், சோதிட நம்பிக்கை, சாதீயம், பிராந்தியவாதம், மதவாதம் போன்ற பல காரணிகள் தமிழர்களின் பிறப்பு வீதத்தைக் குறைத்தாலும், நலிவடைந்த பொருளாதாரமே முதன்மைக் காரணியாகத் தொடர்ச்சியாகத் தமிழர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதையும், குறைந்த பிள்ளைகள் பெறுவதையும் தூண்டுகிறது.
தமிழர்களின் குடித்தொகையை இலங்கையில் அதிகரிக்க வேண்டுமானால், தமிழர்களின் பொருளாதாரம் கட்டியெழுப்பப்பட
வேண்டும்.
தமிழர்களின் நலிவடைந்த பொருளாதாரம் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருக்கும் தமிழர்களின் புள்ளிவிபரங்களினாலும், அதிகரித்த மந்த போசணை மற்றும் தாய்-சேய் இறப்பு வீதங்கள் மூலமாகவும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
முஸ்லிம் சமூகத்திடம் இருந்து கற்க வேண்டிய பாடம்:
இந்த விடயத்தில் தமிழர்கள் முஸ்லிம்களிடம் இருந்து பாடம் கற்றுக் கொள்ளவேண்டும். அரசியல்வாதிகளின்
ஒற்றுமையின்மைக்கு மத்தியிலும், தமக்கென வங்கி கட்டமைப்பு, பள்ளிவாசல்கள் மூலம் ஒன்றுபட்ட சமூக பொருளாதார
வேலை திட்டங்கள் ஆகியவற்றை முஸ்லிம்கள் வெற்றிகரமாக உருவாக்கியுள்ளனர்.
இவ்வாறான வேலைத்திட்டங்கள் எவற்றைப் பற்றியும் சிந்திக்காது, தமிழினம் விசர் தனமான பதிவுகளை
யூடீயுப் மற்றும்
சமூக ஊடகங்களில் பதிவேற்றி மற்றவர்களைக் குற்றம் சாட்டியும், நக்கலடித்தும் மகிழ்ந்து கொண்டிருப்பது
தமிழினத்தின் சாபக்கேடு என்றே சொல்லவேண்டும்.
வைத்திய கலாநிதி முரளி வல்லிபுரநாதன்
சமுதாய மருத்துவ நிபுணர், குடித்தொகையியல் ஆய்வாளர்
4.11.2025

