Home இலங்கைபோதைக்கு எதிரான சமர் ஆரம்பம்

போதைக்கு எதிரான சமர் ஆரம்பம்

by admin

போதைப்பொருளுக்கு முடிவு கட்டுவதற்குரிய சமர் ஆரம்பமாகியுள்ளது. இந்த சமரை கண்டு அஞ்ச வேண்டாம். அதற்கு பேராதரவு தாருங்கள். வடக்கு மண்ணில் இருந்து போதைப்பொருள் மாபியாக்கள் உட்பட குற்றச்செயல்களில் ஈடுபடும் தரப்புகளை துடைத்தெறிவோம் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அழைப்பு விடுத்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்ட செயலகம் மற்றும் சாவகச்சேரி பிரதேச செயலகம் இணைந்து நடத்திய நடமாடும் சேவை சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

இந்நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், மாவட்ட செயலாளர் ம.பிரதீபன், சாவகச்சேரி பிரதேச செயலாளர் சத்தியசோதி, நகர சபை தவிசாளர், பிரதேச சபை தவிசாளர், அரச அதிகாரிகள் உட்பட பலரும் கலந்துக் கொண்டனர். இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு அழைப்பு விடுத்தார்.

மேலும் கூறியவை வருமாறு,

“ போதைப்பொருள் விற்பனையாளர்கள், கஞ்சா கடத்துபவர்கள் மற்றும் வாள்வெட்டு குழுவினரால் யாழ். மாவட்டம் சீரழிந்து வருகின்றது. எனவே, இவற்றுக்கு முடிவு கட்டி, சுமூக நிலைமையை தோற்று விக்குமாறு யாழ். மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்தனர். தற்போது போதைப்பொருள் கும்பல் மற்றும் பாதாள குழு உறுப்பினர்களின் செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு வருகின்றது.

போதைப்பொருளுக்கு எதிரான கூட்டு நடவடிக்கை நாடு தழுவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பாதாள குழு பின்னணியில் கறுப்பு நிர்வாக பொறிமுறையொன்றே உள்ளது. இதற்கு உதவும் சில நபர்கள் எல்லா இடங்களிலும் இருக்கவே செய்கின்றனர். இதன் பின்னணியில் கறுப்பு பணம் புகுந்து விளையாடுகின்றது.

இந்நிலைமையை கண்டும், காணாததுபோல் இருக்க முடியாது. அது எமது இளைய தலைமுறையினருக்கு இழைக்கும் பெரும் துரோகமாகும். எனவே, யுகத்துக்கு முடிவு கட்டப்படும். மக்களால் சட்டப்பூர்வமாக செயற்படும் அரசாங்கம் தான் நாட்டை ஆள வேண்டும். கறுப்பு உலகத்தால் நிர்வாகத்தை முன்னெடுக்க இடமளிக்க முடியாது.

மக்களுக்காக செயலாற்றுவதே எமது அரசாங்கத்தின் நோக்கம். ஊழல், மோசடிகளற்ற தூய நிர்வாகத்தை நோக்கிய பயணத்துக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். குறிப்பாக அரசாங்க ஊழியர்கள் தமது ஒத்துழைப்பை வழங்க வேண்டும். அரச ஊழியர்களுக்குரிய அத்தனை வசதிகளும் செய்து கொடுக்கப்படும்.

போதைப்பொருளுக்கு முடிவு கட்டுவதற்குரிய சமர் ஆரம்பமாகியுள்ளது. இந்த சமரை கண்டு அஞ்ச வேண்டாம். அதற்கு பேராதரவு தாருங்கள். மக்களுக்கு தகவல் தெரியும். அதனை உரிய தரப்பினருக்கு அறிவியுங்கள். எதற்கும் அஞ்சவேண்டாம். இளைஞர்களே முன்வாருங்கள், உங்களுக்கு பின்னால் அரசாங்கம் நிற்கும். சண்டியர்களை நொண்டியர்களாக்குவோம் என அமைச்சர் தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More