Home இலங்கைகாற்றாலை மின் திட்டத்திற்கு எதிரான போராட்டம் நிறைவுக்கு வந்தது.

காற்றாலை மின் திட்டத்திற்கு எதிரான போராட்டம் நிறைவுக்கு வந்தது.

by admin

மன்னாரில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்த காற்றாலை மின் திட்டத்திற்கு எதிரான போராட்டம் 105 ஆவது நாளான இன்றைய தினம் சனிக்கிழமை (15) மாலை நிறைவுக்கு வந்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பாக மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் மாக்கஸ் அடிகளார் இன்றைய தினம் சனிக்கிழமை (15) மாலை போராட்ட களத்தில் விசேட ஊடக சந்திப்பு ஏற்பாடு செய்தார்.

இதன் போது மன்னார் மறைமாவட்ட ஆயர்   எஸ்.ஞானப்பிரகாசம் ஆண்டகை கலந்து கொண்டதோடு,போராட்ட களத்தில் அங்கம் வகித்தவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்தார் அருட்தந்தை எஸ்.மாக்கஸ் அடிகளார்,,,

-மக்களின் வாழ்விடங்களையும்,வாழ்வாதாரத்தையும்,இருப்பையும் பாதிப்புக்கு உள்ளாக்கி வரும் காற்றாலை மற்றும் கணிய மண் அகழ்வுக்கு எதிரான போராட்டம் இன்றைய தினம் 105 ஆவது நாளை கடக்கின்றது.

ஜனாதிபதி அவர்களின் அமைச்சரவை அறிவிப்பை நாங்கள் சற்று பரிசோதனைக்கு உட்படுத்தினோம். அதற்கமைவாக 105 ஆவது நாளான இன்றைய தினம் சனிக்கிழமை(15) மாலை எமது போராட்டத்தை நிறுத்திக் கொள்ளுகின்றோம்.எமது போராட்டம் என்ன கோரிக்கைகளை முன் வைத்து முன்னெடுக்கப்பட்டதோ அந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு.

எங்களுடைய முக்கியமான கோரிக்கை என்ன என்றால் மன்னார் மண்ணிலே கனிய மணல் அகழ்வுக்கான அனைத்து வித அனுமதிகளும் நிறுத்தப்பட வேண்டும்.மேலும் மன்னார் தீவில் அகழ்வு செய்யப்படுகின்ற மணல் மண் தீவை விட்டு வெளியில் கொண்டு செல்லப்படுவது தவிர்க்க வேண்டும்.

கொண்டு செல்லப்படும் மண் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.எனவே அரசாங்கம்  கனிய  மணல் அகழ்வுக்கு அனுமதி வழங்காது என்ற நம்பிக்கையுடனே இந்த போராட்டத்தை நிறுத்துகிறோம்.வெகு விரைவில் அரசாங்கம் கனிய  மணல் தொடர்பாக அமைச்சரவை அனுமதியை பெற்று தேசிய கொள்கையாக  அதனை அறிவிப்பார்கள் என்பதை நம்பு கின்றோம்.
எதிர்வரும் காலத்தில் எல்லா நடவடிக்கைகளையும் கண்காணித்துக் கொள்ளுவதற்காக எல்லா மக்களையும் உள்ளடக்கிய ஒரு கண்காணிப்புக் குழுவை அரச அதிபர் தலைமையில் உடனடியாக அமைத்து குறித்த குழுவினுடைய கண்காணிப்பின் கீழ் எல்லா விதமான செயல்பாடுகளையும் முன்னெடுப்பது சிறந்ததாக அமையும் என்பதை இப்போராட்ட குழு சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம். என தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து மன்னார் மூர்வீதி ஜும்மா பள்ளி பிரதம மௌலவி எம்.அஸீம் கருத்துக்களை தெரிவித்தார்.இதனைத் தொடர்ந்து அருட்தந்தை எஸ்.மாக்கஸ் அடிகளார் தலைமையிலான குழுவினர் மன்னார் மாவட்ட செயலகத்திற்கு சென்று மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரனி டம் தமது கோரிக்கை அடங்கிய மகஜரை கையளித்தனர்.
இதன் போது மன்னார் மறைமாவட்ட ஆயர்,போராட்டக்குழு பிரதிநிதிகள்,மன்னார் பிரஜைகள் குழுவின் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More