கொழும்பு, கொலன்னாவை, கடுவெல, சீதாவக்க மக்களுக்கான அவசர அறிவிப்பு
அடுத்த சில மணித்தியாலங்களில் கொலன்னாவை, கடுவெல, சீதாவக்க மற்றும் கொழும்பு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் வெள்ள நிலைமை அதிகரிக்கக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரித்துள்ளதாக கொழும்பு மாவட்ட செயலாளர் பிரசன்ன கினிகே தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, அந்தப் பிரதேசங்களிலிருந்து வெளியேறாமல் இன்னும் வீடுகளிலேயே தங்கியிருக்கும் மக்கள், கூடிய விரைவில் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான நிலையங்களுக்குச் செல்லுமாறு மாவட்ட செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், களனி ஆற்றுப் பள்ளத்தாக்கு மற்றும் ஆற்றின் இரு கரைகளிலும் வசிக்கும் மக்களையும் உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பன்னல முதியோர் இல்லத்தில் வெள்ளம்: 11 பேர் பலி
பன்னல, நாலவலான பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தினால் முதியோர் இல்லம் ஒன்றில் இருந்த 11 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அங்கு இருந்த மேலும் 14 பேர் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட நேரத்தில் குறித்த முதியோர் இல்லத்தில் 25 பேர் இருந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
துல்ஹிரிய பகுதியில் மண்சரிவு – 21 பேரை காணவில்லை
நாடு முழுவதும் நிலவும் சீரற்ற காலநிலையால், வரகாபொல காவற்துறைப் பிரிவுக்குட்பட்ட துல்ஹிரிய, மொன்ரோவியா தோட்டம் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்த மண்சரிவில் சுமார் 21 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காணாமல் போனவர்களைத் தேடும் நடவடிக்கையை வரகாபொல காவற்துறையினர் ஆரம்பித்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மல்வத்து ஓயாவை அண்மித்த பகுதியில் 3 பெண்கள் மீட்பு
மல்வத்து ஓயா ரயில் பாலத்திற்கு அருகில் வௌ்ளம் காரணமாக சிக்கியிருந்த 3 பெண்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
பெல் – 412 ஹெலிகொப்டரின் ஊடாக குறித்த பெண்களை விமானப்படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

