Home இலங்கைவிவசாய காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஆராய்வு

விவசாய காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஆராய்வு

by admin

 

 

யாழ்ப்பாணத்தில் பாதுகாப்புத் தரப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ள விவசாயப் பண்ணைகளை விடுவிப்பதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள முயற்சிகள் தொடர்பில் புதிய யாழ். மாவட்ட கட்டளை தளபதியுடன் வடமாகாண ஆளுநர் கலந்துரையாடியுள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும்  யாழ்ப்பாண பாதுகாப்புப் படைகளின் புதிய கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கே.ரி.பி.டி.சில்வா ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதியாகக் கடந்த 27ஆம் திகதி கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட மேஜர் ஜெனரல் கே.ரி.பி.டி.சில்வா, வடக்கு மாகாண ஆளுநரை சம்பிரதாயபூர்வமாகச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

அதன் போது, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் பொதுமக்களின் காணிகளை விடுவித்தல் தொடர்பாகவும், கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட காணி விடுவிப்புக்களின் முன்னேற்றங்கள் தொடர்பாகவும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

பாதுகாப்புத் தரப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ள விவசாயப் பண்ணைகளை விடுவிப்பதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள முயற்சிகள் மற்றும் அதற்கான சாத்தியப்பாடுகள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது. பாதுகாப்புத் தரப்பினரால் நிர்வகிக்கப்படும் வர்த்தக நிலையங்கள் தொடர்பாகவும் ஆளுநரால் இச்சந்திப்பின் போது சுட்டிக்காட்டப்பட்டது. மேலும், பாதுகாப்புத் தரப்பினர் கடந்த காலங்களில் வழங்கிய ஒத்துழைப்புக்கள் குறித்தும் இதன்போது கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

அந்தவகையில் அச்சுவேலி மற்றும் பலாலிப் பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயங்களை ஒட்டியுள்ள சில விவசாய நிலங்கள் மற்றும் கால்நடைப் பண்ணைகள், கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பாரிய நெல் மற்றும் மரக்கறிச் செய்கை பண்ணைகள் மற்றும் ஏ9 வீதி மற்றும் பிரதான வீதிகளில் இராணுவத்தினால் நடத்தப்படும் ‘ஹெல விரு’ (Hela Viru) போன்ற உணவகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களின் நிர்வாகத்தை சிவில் அமைப்புகளிடம் ஒப்படைக்க ஆளுநர் வலியுறுத்தியுள்ளார்.
காணிகள் விடுவிக்கப்பட்ட பின்னர், அங்கு மீளக் குடியேறும் விவசாயிகளுக்கு அரசாங்கம் மற்றும் சர்வதேச அமைப்புகள் ஊடாக நீண்டகாலமாகப் பயன்படுத்தப்படாத நிலங்களைச் சீரமைக்கத் தேவையான டிராக்டர்கள், நீர் இறைக்கும் இயந்திரங்கள் மற்றும் விதைகளை வழங்க வடமாகாண விவசாய அமைச்சு திட்டமிட்டுள்ளது.
விடுவிக்கப்பட்ட காணிகளில் வீடுகள் சேதமடைந்திருந்தால், புதிய வீடுகளை அமைப்பதற்கு தலா 2.5 மில்லியன் ரூபாய் வரையிலான அரசாங்க வீடமைப்பு மானியம் வழங்கப்பட வாய்ப்புள்ளதுடன்
குறைந்த வட்டி விகிதத்தில் விவசாயக் கடன்களை வழங்கி, மீண்டும் பயிர்ச்செய்கையை ஆரம்பிக்க வங்கிகள் ஊடாக வசதிகள் செய்யப்படும்.
புதிய கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சில்வா, தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லாத வகையில், படிப்படியாக இந்தக் காணிகளை விடுவிக்கத் தனது இணக்கத்தைத் தெரிவித்துள்ளார். இது சிவில்-இராணுவ உறவை (Civil-Military Coordination) வலுப்படுத்தும் ஒரு முக்கிய நகர்வாகக் கருதப்படுகிறது.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More