உரிமைகளுக்காக போராடியவர்களுக்கு பயங்கரவாதிகள் என முத்திரை குத்தப்பட்டது. உண்மையிலேயே அவர்கள் பயங்கரவாதிகள் இல்லை.அவர்கள் உணர்வுடன் தமது உரிமைகளை பெற்றுக் கொள்ள போராடியவர்கள்.எனவே வடக்கு கிழக்கில் உள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளாகிய நாம் ஒற்றுமையுடன் எமது உறவுகளுக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க செயலாளர் சிவாநந்தன் ஜெனிற்றா தெரிவித்தார்.
மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க புதிய நிர்வாக தெரிவு இன்று செவ்வாய்க்கிழமை (10) காலை மன்னார் நகர மண்டபத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில், வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க செயலாளர் சிவாநந்தன் ஜெனிற்றா கலந்துகொண்டு உரையாற்றிய போதே மேற்கண்டவாறு தொிவித்துள்ளாா்.
இன்றைய கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் ஒருமனதாகத் தெரிவு செய்யப்பட்டனர். இதன்போது புதிய நிர்வாகத்தில் தலைவராக மீண்டும் உதயச்சந்திரா தெரிவு செய்யப்பட்டார்.செயலாளராக லுஸ்ரின் மோகன்ராஜ், உப தலைவராக திருமதி ரஞ்சினி,உப செயலாளராக வேணி, பொருளாளராக இமாக்குலேற் ஆகியோர் தெரிவு செய்யப்பட்ட தோடு, நிர்வாக உறுப்பினர்கள் 8 பேர் தெரிவு செய்யப்பட்டனர்.
அங்கு உரையாற்றிய ஜெனிற்றா “உரிமைகளுக்காகப் போராடியவர்களுக்குப் பயங்கரவாதிகள் என முத்திரை குத்தப்பட்டது. அவர்கள் சம்பளத்திற்காக வேலைக்குச் செல்லவில்லை, உணர்வுடன் உரிமைகளுக்காகப் போராடியவர்கள்.”
“மாறி மாறி வரும் அரசுகள் பொய் வாக்குறுதிகளைக் கூறி எமது மக்களை ஏமாற்றுகின்றன. தற்போதைய அநுர குமார திஸாநாயக்க அரசும் ஆட்சிக்கு வந்து ஓராண்டு கடந்தும் (2025-2026), இராணுவத்தைக் காட்டி கொடுக்காமல் போலி நாடகம் ஆடுகிறது.”
2009-இல் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட மற்றும் சரணடைந்த உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதற்கு 16 ஆண்டுகள் கடந்தும் பதில் இல்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
அநுர அரசாங்கம் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்கப்போவதாகத் தேர்தல் காலத்தில் உறுதியளித்திருந்தது. ஆனால், தற்போதைய நிலையில் நீதியான விசாரணை மற்றும் சர்வதேச பொறிமுறை குறித்து பாதிக்கப்பட்ட உறவுகள் கடும் அதிருப்தியில் இருப்பதை இன்றைய மன்னார் நிகழ்வு உறுதிப்படுத்துகிறது.

Tag Words: #EnforcedDisappearances #JusticeForTamil #MannarNews2026 #NorthernSriLanka #HumanRights #AnuraKumaraGovt #GenittaSivanandan #LKA

