180
கடந்த ஆண்டு நவம்பர் 12ஆம் திகதி, கிரிந்த கடற்கரையில் 350 கிலோ கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் அதிரடியாகக் கைப்பற்றப்பட்டது. மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவின் அப்போதைய பணிப்பாளர் உதவிப் காவற்துறை அத்தியட்சகர் ரொஹான் ஓலுகலவுக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.
இந்த போதைப்பொருள் கடத்தலின் பின்னணியில் துபாயில் தலைமறைவாக இருக்கும் ‘அங்கொடை பிரியந்த’ என்ற பாதாள உலகக் கும்பல் தலைவன் இருப்பது தெரியவந்தது. தனது கோடிக்கணக்கான மதிப்பிலான போதைப்பொருள் பிடிபட்டதால் ஆத்திரமடைந்த அவன், தகவல் வழங்கிய ஒற்றரைத் தேடிக் கண்டுபிடித்துள்ளான்.
தகவல் வழங்கிய ஒற்றரைக் கொலை செய்து, அவரது தலையைத் துண்டித்து, அதனை உதவி காவற்துறை அத்தியட்சகர் ரொஹான் ஓலுகலவின் வீட்டின் முன்னால் வைப்பதற்காகப் பாதாள உலகக் கும்பல் ஒன்றிற்கு ‘அங்கொடை பிரியந்த’ ஒப்பந்தம் வழங்கியுள்ளான்.
உயிருக்கு அஞ்சிய ஒற்றர் தலைமறைவாகியிருந்த நிலையில், இந்த சதித்திட்டம் குறித்து மேல் மாகாண வடக்குப் பகுதி பிரதி காவற்துறை மா அதிபர் காலிங்க ஜயசிங்கவுக்கு இரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து களமிறங்கிய காவற்துறையினர், கொலை ஒப்பந்தத்தைப் பொறுப்பேற்ற கூலிப்படை கொலையாளியைக் கைது செய்துள்ளனர்.
கிரிந்த கடற்கரையில் 350 கிலோ ஐஸ் போதைப்பொருள் பிடிபட்ட விவகாரத்தில், தகவல் வழங்கிய ஒற்றரைத் தீர்த்துக்கட்ட முயன்ற பாரிய சதித்திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது!
கைது செய்யப்பட்ட நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த கொடூரமான சதித்திட்டம் முழுமையாக அம்பலமாகியுள்ளது. மேலதிக விசாரணைகளை காவற்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.
Spread the love

