Home இலங்கைதாக்குதலுக்குள்ளான IRIS Dena கப்பலில் இருந்து மீட்கப்பட்ட மாலுமிகள் – 22 பேர் விமானப்படை முகாமிற்கு மாற்றம்! 

தாக்குதலுக்குள்ளான IRIS Dena கப்பலில் இருந்து மீட்கப்பட்ட மாலுமிகள் – 22 பேர் விமானப்படை முகாமிற்கு மாற்றம்! 

அமெரிக்கா உடன்பட்டது!

by admin
தாக்குதலுக்குள்ளான IRIS Dena கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, காலியில் உள்ள கராப்பிட்டிய தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று குணமடைந்த 22 மாலுமிகள், மேலதிக பராமரிப்பு மற்றும் விசாரணை நடவடிக்கைகளுக்காக கொக்கல விமானப்படை முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த மார்ச் 4ஆம் திகதி, காலி துறைமுகத்திலிருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவில் விபத்துக்குள்ளான ஈரான் கடற்படைக்கு சொந்தமான இந்தக் கப்பலில் இருந்த 35 பேரை இலங்கை கடற்படையின் மீட்புக் குழுவினர் பாதுகாப்பாக கரைக்கு அழைத்து வந்தனர்.
அதனைத் தொடர்ந்து அவர்கள் காலியில் அமைந்துள்ள கராப்பிட்டிய தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் மேலும் 10 பேர் இன்னும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, IRIS Dena கப்பல் மீது நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த 84 ஈரான் மாலுமிகளின் உடல்கள் தொடர்பான மரண பரிசோதனைகள் கடந்த சில நாட்களாக காலி தேசிய வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும் சிகிச்சை பெற்று வரும் மாலுமிகளில் 8 பேர் அவசர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கிடையில், இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற “மிலன் 2026” கூட்டுப் பயிற்சியில் பங்கேற்கச் சென்ற ஈரானின் மூன்று கப்பல்களில் ஒன்றான IRIS Bushehr என்ற போர்க்கப்பல், சில நாட்களுக்கு முன்னர் பாணந்துறைக்கு அப்பால் அமைந்துள்ள இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் (EEZ) நுழைந்தது.
அதனைத் தொடர்ந்து மார்ச் 5ஆம் திகதி இரவு, அந்தப் போர்க்கப்பலில் இருந்த ஊழியர்கள் உட்பட 204 மாலுமிகளை இலங்கை கடற்படையினர் கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வந்தனர்.
இவர்களில் 53 அதிகாரிகள், 54 கடற்படை பயிலுநர்கள், 48 சிரேஷ்ட மாலுமிகள் மற்றும் 23 மாலுமிகள் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் அவர்கள் வெலிசர கடற்படை முகாமிற்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இதேவேளை, ஈரானியக் கப்பல்கள் தொடர்பான விவகாரங்களை கையாள்வதில் இலங்கையின் இறைமையை அமெரிக்கா மதிப்பதாக, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் IRIS Bushehr கப்பல், அதன் ஊழியர்கள் மற்றும் மீட்கப்பட்ட மாலுமிகள் தொடர்பான இறுதி முடிவுகளை எடுக்கும் அதிகாரம், இலங்கையின் உள்நாட்டுச் சட்டங்களும் சர்வதேச சட்டக் கடப்பாடுகளும் அடிப்படையாகக் கொண்டு இலங்கைக்கே இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More