Home இலக்கியம்நீண்டதவம் கலைந்த வெறியில் எழுந்தாள்-கலாவதி கலைமகள்.

நீண்டதவம் கலைந்த வெறியில் எழுந்தாள்-கலாவதி கலைமகள்.

by admin

நீண்டதவம் கலைந்த வெறியில் எழுந்தாள்

காற்றில் சிக்குண்ட கிழிசலை

இடையில் கட்டிக்கொண்டாள்

குனிந்தபடியே கிடந்து விடாய் தணித்தாள்

ஆடுமேய்க வந்தவர்கள்

இவள் செந்நிறக்கண்கள்கண்டு அச்சம்மேலிட ஓடினர்

 

காற்றின் வேகம் கிழிசலைக் கிழித்தெறிந்தது

அவள் நிர்வாணத்தின் அச்சம்

ஊரை அடக்கியது

 

சிவந்த கண்களில் தெறித்த வெளிச்சம்

பார்ப்பவரை அச்சப்படுத்தியது

திரண்டு கிடந்த கூந்தல்

அடர் கருமேகமாய் அசைந்தது

நிமிர்ந்த நடையும்

ஊரைவெறித்த கண்களுமாய்

ஊர் அளந்தாள்

 

கொடியில் கிடந்த சேலையை எடுத்துப்போர்த்தினாள் ஒருத்தி

சிறுகல்குத்திப் புண்ணாக்கிய காலுக்கு மருந்திட்டாள் மற்றொருத்தி

பழஞ்சோற்றில் நீருட்டு கருவாட்டோடு கொடுத்தாள் இன்னொருத்தி

மெலிந்த கண்ணகளின் சிவப்பு வற்ற

காலை நீட்டி அப்படியே படுத்தாள்

 

அவள் மௌனம் கலைத்து

ஒரு துளி சட்டென விழுந்தது

பின் அடுத்து, அடுத்தடுத்து

பட்டென ஒருமின்னலில் வான் பிளந்து

கொட்டத்தொடங்கியது மழை

 

கொடியில் கிடக்கும் உடுப்பெடுக்க

வெயிலில்க்காய்ந்த மீன் பொறுக்க

ஊர் ஓடியது

 

செம்மண் கலந்த நீர்

அவள் வெற்றுடம்பு தொட்டோடிற்று

தெறித்த மின்னல் நெற்றியில் வீழ்ந்து மடிந்தது

வானக்கருமை மறைய கண்விழித்து எழுந்தாள்

வானம் நீலம் படரச் சிரித்தது.

 

கலாவதி கலைமகள்,

நாவற்குடா, மட்டக்களப்பு.

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More