149
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ்நடராஜா ரவிராஜ் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியமான சட்ட முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. குற்றம் சுமத்தப்பட்டவர்களை முன்பு விடுவித்த தீர்ப்பை மேன்முறையீட்டு நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இதனையடுத்து, இந்த வழக்கை மீண்டும் விசாரணைக்கு உட்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டு நள்ளிரவு நடைபெற்ற விசேட ஜூரி விசாரணையின் மூலம், குற்றம் சாட்டப்பட்டிருந்த கடற்படை வீரர்கள் உள்ளிட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டிருந்தனர். அந்தத் தீர்ப்பை மேன்முறையீட்டு நீதிமன்றம் தற்போது முழுமையாக ரத்து செய்துள்ளது.
இந்த வழக்கினை ஆரம்பத்திலிருந்து மீண்டும் விசாரணை செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.
2006 ஆம் ஆண்டு நவம்பர் 10 ஆம் திகதி கொழும்பு நாரஹேன்பிட்டிய பகுதியில் வைத்து நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் ஆகியோர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.இந்த வழக்கில் இலங்கை கடற்படையைச் சேர்ந்த மூவர் உட்பட அறுவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், சிங்கள மொழி பேசும் ஜூரி சபையினரால் குற்றம் சுமத்தப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இதனை எதிர்த்து ரவிராஜின் மனைவி சசிகலா ரவிராஜ் மேன்முறையீடு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய விசாரணையின் போது சாட்சிகள் மற்றும் ஆதாரங்கள் மீண்டும் ஆய்வு செய்யப்படவுள்ளதால், நீண்ட காலமாக நிலுவையில் இருந்த இந்த வழக்கில் நீதியினை உறுதி செய்யும் முக்கியமான கட்டமாக இது பார்க்கப்படுகிறது.
Spread the love

