105
மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்காவுடன் தொடர்புடைய பல்கலைக்கழகங்கள் இலக்கு வைக்கப்படலாம் என ஈரான் விடுத்த அச்சுறுத்தலைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெய்ரூட் அமெரிக்க பல்கலைக்கழகம் திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய இரு தினங்களுக்கு தனது நேரடி வகுப்புகள் மற்றும் பரீட்சைகளை ரத்து செய்துள்ளது.
தற்போதைய சூழலில் பல்கலைக்கழகத்திற்கோ அல்லது அதன் மருத்துவ மையங்களுக்கோ நேரடி அச்சுறுத்தல் எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், மாணவர்களினதும் ஊழியர்களினதும் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஈரான் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் உள்ளிட்ட அந்நாட்டு கல்வி நிறுவனங்கள் மீது அண்மையில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்தியதாகக் கூறப்படும் தாக்குதல்களுக்குப் பதிலடியாகவே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மார்ச் 30ஆம் திகதி நண்பகல் 12 மணிக்குள் அமெரிக்கா இத்தாக்குதல்களைக் கண்டிக்கத் தவறினால், பிராந்தியத்திலுள்ள அமெரிக்க பல்கலைக்கழகங்கள் தாக்குதலுக்கு உள்ளாகும் என ஈரான் எச்சரித்துள்ளது. மேலும், இவ்வாறான கல்வி நிறுவனங்களில் பணியாற்றுவோர் மற்றும் பயிலும் மாணவர்கள் வளாகங்களிலிருந்து குறைந்தது ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அபுதாபியில் உள்ள நியூயோர்க் பல்கலைக்கழகம் மற்றும் கட்டாரில் உள்ள டெக்சாஸ் ஏ&எம் (Texas A&M) உள்ளிட்ட பல அமெரிக்கக் கல்வி நிறுவனங்கள் இயங்கி வரும் நிலையில், இந்த அச்சுறுத்தல் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
வன்முறையின் அனைத்து வடிவங்களையும் நிராகரிப்பதாகத் தெரிவித்துள்ள AUB நிர்வாகம், கல்வி மற்றும் சுகாதார நிறுவனங்கள் ஆயுத மோதல்களிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. உத்தியோகபூர்வமற்ற செய்திகளை நம்ப வேண்டாம் எனவும் தனது சமூகத்தினரை பல்கலைக்கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.
Spread the love

