237
வந்தாரை வரவேற்று விருந்தோம்பி உபசரிக்கும் பண்பான பெருமக்களை கொண்டதும் கூத்து கலைக்கு பெயர் போனதுமான கிராமம்தான் மட்டக்களப்பு சின்ன ஊரணி கிராமம் ஆகும்.அமரர் அண்ணாவியார் இரத்தின சிங்கம் அவர்கள் இக்கிராமத்தில் தான் பெருமைமிகு அண்ணாவியார் தம்பி பிள்ளை ஆனந்தம் தம்பதியினருக்கு ஒன்பதாவது புத்திரனாக 17-07-1959அன்று பிறந்தார். இவர் வளர்ந்து ஐந்து வயதானதும் மட்/கோட்ட முனை கனிஷ்ட வித்தியாலயத்தில் இவருக்கு வித்தியாரம்பம் செய்யப்பட்டு தனது கல்வியை தொடர்ந்தார் .கோட்டை முனை அரசினர் கல்லூரியில் (தற்சமயம் இந்துக்கல்லூரி) சேர்ந்து கா.பொ.த சாதாரண தரம் வரை கற்று சித்தியடைந்தார் அத்துடன் பாடசாலை கல்வியை முடித்துவிட்டு தொழிலிலும் கூத்து கலையிலும் தந்தையாருக்கு உறுதுணையாக இருந்து செய்யப்பட்டார்.கலைக் குடும்பத்தின் வாரிசான இவர் நல்லொழுக்கமும் கீழ்படிவும் நற்பண்பும் கடவுள் பக்தியும் கொண்டு விளங்கினார்.
கலை குடும்பத்தின் இளைய வாரிசான அமரர் இரத்தின சிங்கம் அவர்கள் ஒரு புகழ்பெற்ற பிரபல்யமான கூத்துக் கலைஞர் என்பதை அறியாதார் எவரும் இல்லை.இவர் தனது தந்தையாரான அண்ணாவியார் தம்பி பிள்ளை அவர்களுடைய கூத்துகளில் ஆடி பயிற்சி பெற்றவர் பின் அவருடைய கலரில் நின்று மத்தளம், சல்லரி முதலிய இசைக்கருவிகளை கையாண்டு அவற்றிலும் பயிற்சி பெற்றார்.பின் தானாகவே பல கூத்துக்களை எழுதி பயிற்றுவித்து அரங்கேற்றியும் உள்ளார். கண்ணமுத்து போடியார் , காலமோ கலி காலம், பாஞ்சாலி சபதம் ,பார்வதி திருமணம்,வல்லவன் வாலி, சத்தியத்தின் சோதனை என்பன இவர் எழுதி வைத்து அரங்கேற்றிய கூத்துகள் ஆகும். வின்சென்ட் பெண்கள் பாடசாலை, சிசிலியா பெண்கள் பாடசாலையிலும் நடாத்தப்பட்ட முத்தமிழ் விழா ,தமிழ் தின நிகழ்ச்சிகளில் பாடசாலை மாணவர்களை கொண்டு பயிற்றுவித்து நாடகங்களை அரங்கேற்றியுள்ளார்.போட்டிகளில் பரிசுகளையும் பெற்றுக்கொடுத்து பாராட்டுகளையும் கௌரவங்களையும் பெற்றுள்ளார் .
கோட்டை மட்ட கூத்து போட்டியில் பரிசு பெறவைத்தமைக்காக மகாஜன கல்லூரியில் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டுள்ளார்.ரூபவாஹி னி தொலைக்காட்சியில் பாடசாலை மட்டத்தில் நடாத்தப்பட்டு பரிசு பெற்று கூத்து ஒளிபரப்பு செய்யப்பட்டது .பல்கலைக்கழக மாணவர்களாலும் இவரது கூத்துகள் ஆய்வு செய்யப்பட்டதாகவும் அக்கூத்து பிரதிகள் மீண்டும் தன்னிடம் ஒப்படைக்கப்படவில்லை என்றும் ஆதங்கப்பட்டிருந்தார்.மேலும் இவர் கவிதைகள் பாடல்கள் இயற்றுவதிலும் கூட சிறந்தவர். சின்ன ஊறணியின் கோயில் கொண்டிருக்கும் ஆதிபேச்சியம்மன் மீது இவரால் இயற்றப்பட்டு பாடப்பட்ட “ஆதி பேச்சியம்மன் புகழ் மாலை” இறுவெட்டில்13-06-2017அன்று இவ்வாலயத்திலேயே வெளியிட்டு வைக்கப்பட்டு இவருக்கான கௌரவிப்பும் ஊர் பொதுமக்களால் வழங்கப்பட்டது.
கோயில் தொண்டுகள் செய்வதிலும் இவர் மும்முரமாக ஈடுபட்டு ஏனையோர்க்கு முன்மாதிரியாக இருந்துள்ளார் சின்ன ஊரணி ஆதிபச்சியம்மன் ஆலயம் ,அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலயம் முதலிய ஆலயங்களில் போசகராகவும் பதவி வகித்துள்ளார் இவற்றைத் தவிர சமூக சேவைகளிலும் ஈடுபட்டுள்ளார் சிவில் பாதுகாப்பு குழுவிலும் உறுப்பினராக இருந்து சேவையாற்றினார்.மண்முனை வடக்கு கலாசார பேரவையும் இவரது கலை சேவையை பாராட்டி கௌரவித்துள்ளது 2010ஆண்டு கலாச்சார பேரவையால் வெளியிடப்பட்ட கலைஞர் விவரத்திரட்டில் இவரை பற்றி விவரங்களும் அவர் தந்தையாரை பற்றிய விபரங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.சாதுவான போக்கு, ஆறுதலான பேச்சு, அமைதியான நடை மென்மையான செயல்பாடு என்பனவையெல்லாம் இவரது தன்மைகள் நற்பண்புக்கு இலக்கண மாணவர் விருந்தோம்பலுக்கு அவருக்கு நிகர் அவரே தான் 07- 10- 2018 ஆம் ஆண்டு அன்று மண்ணுலக வாழ்வை விட்டு விண்ணுலக வாழ்வில் சங்கமித்துவிட்டார்.
இ.ரூவினி
Spread the love

