138
கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சி. ரவீந்திரநாத் கடத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மீதான குற்றச்சாட்டுகள் வலுவடைந்துள்ளன.
சுமார் 359 நாட்கள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த அவர், கடந்த ஏப்ரல் 02, 2026 அன்று கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போது, அவரைத் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணையின் போது குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில் பல பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளன. செவனப்பிட்டிய பகுதியில் பிள்ளையானால் இரகசிய வதைமுகாம் ஒன்று நடத்தப்பட்டு வந்தமை தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
2006ஆம் ஆண்டு கொழும்பில் வைத்து கடத்தப்பட்ட பேராசிரியர் ரவீந்திரநாத், குறித்த செவனப்பிட்டிய வதைமுகாமிற்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கு வைத்தே படுகொலை செய்யப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.
குறித்த வதைமுகாமில் பணியாற்றிய பணியாளர்களே தற்போது சிஐடியினரிடம் விரிவான சாட்சியங்களை வழங்கியுள்ளனர். பேராசிரியருக்கு அங்கு இழைக்கப்பட்ட சித்திரவதைகள் மற்றும் கொழும்பில் இருந்து அவர் கடத்திச் செல்லப்பட்ட விதம் குறித்து அவர்கள் வழங்கிய வாக்குமூலங்கள் இவ்வழக்கில் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளன.
இந்த வதைமுகாமில் மேலும் பலர் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். நீண்டகாலமாக மூடிமறைக்கப்பட்டிருந்த இந்த மர்மக் கொலைச் சம்பவம் தற்போது நீதியின் பிடிக்குள் கொண்டுவரப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.
________________________________________
Spread the love

