117
அமெரிக்க – இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், சஃபோக்கில் உள்ள RAF லேகன்ஹீத் (RAF Lakenheath) விமானப்படைத் தளத்திற்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்ட ஏழு பேர் ஏப்பரல் 5, 2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காவற்துறையினரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் ஐந்து ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் அடங்குவர்.
‘லேகன்ஹீத் அமைதி கூட்டணி’ (Lakenheath Alliance for Peace) எனும் அமைப்பால் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த ஆறு நாள் அமைதி முகாம் போராட்டமானது, பிரித்தானிய மண்ணில் உள்ள இத்தளம் அமெரிக்கப் போர் விமானங்களின் ஏவுதளமாகப் பயன்படுத்தப்படுவதை எதிர்த்து முன்னெடுக்கப்பட்டது. குறிப்பாக, கடந்த 3 ஆம் திகதி ஈரானில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்கப் போர் விமானம் இந்தத் தளத்திலிருந்தே புறப்பட்டதாகக் கூறப்படும் தகவல்கள் போராட்டக்காரர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் ‘பாலஸ்தீன அதிரடிப்படை’ (Palestine Action) குழுவிற்கு ஆதரவான வாசகங்கள் பொறிக்கப்பட்ட ஆடைகளை அணிந்திருந்தனர். இக்குழுவை கடந்த ஆண்டு பிரதமர் கீர் ஸ்டார்மர் தலைமையிலான தொழிற்கட்சி அரசாங்கம் பயங்கரவாத அமைப்பாக அறிவித்து தடை செய்திருந்தது. தடை செய்யப்பட்ட அமைப்பிற்கு ஆதரவு வழங்கிய சந்தேகத்தின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகச் சஃபோக் காவற்துறையினர் தெரிவித்தனர். முன்னதாக, சனிக்கிழமை அன்று பொதுப் பாதையை மறித்த குற்றச்சாட்டில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானை நிபந்தனையற்ற சரணடைதலுக்கு வலியுறுத்தி வரும் நிலையில், தனது நட்பு நாடுகளின் பாதுகாப்பிற்காகப் பிரித்தானியத் தளங்களைப் பயன்படுத்த ஐக்கிய இராச்சியம் மட்டுப்படுத்தப்பட்ட அனுமதியை வழங்கியுள்ளது. இருப்பினும், பிரித்தானிய இறையாண்மை கொண்ட நிலப்பரப்பிலிருந்து அமெரிக்கா மேற்கொள்ளும் இராணுவ நடவடிக்கைகளால் ஏற்படக்கூடிய சட்டரீதியான பாதிப்புகள் குறித்து சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். தற்போதைய சட்டங்களை பாரபட்சமின்றி நடைமுறைப்படுத்துவதே தமது கடமை என காவற்துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
Spread the love

