Home உலகம்நேட்டோ அமைப்புடன் முறுகல்: மீண்டும் கிறீன்லாந்து விவகாரத்தைக் கையில் எடுத்தார் அமெரிக்க ஜனாதிபதி!

நேட்டோ அமைப்புடன் முறுகல்: மீண்டும் கிறீன்லாந்து விவகாரத்தைக் கையில் எடுத்தார் அமெரிக்க ஜனாதிபதி!

by admin
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், நேட்டோ (NATO) அமைப்பின் செயலாளர் நாயகம் மார்க் ரூட்டே (Mark Rutte) உடனான சந்திப்பிற்குப் பிறகு, அந்த அமைப்பின் மீதான தனது கடுமையான விமர்சனங்களை மீண்டும் முன்வைத்துள்ளார். ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்காவுக்கு ஆதரவாகச் செயல்படத் தவறியதாகக் கூறி, நேட்டோவை ஒரு பயனற்ற அமைப்பு என அவர் சாடியுள்ளார்.
வெள்ளை மாளிகையில் புதன்கிழமை (ஏப்ரல் 8, 2026) நடைபெற்ற இந்தத் தனிப்பட்ட சந்திப்பின் போது, ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) மீளத் திறப்பதற்கான அமெரிக்காவின் கோரிக்கையை நேட்டோ உறுப்பு நாடுகள் நிராகரித்தமை குறித்து ஜனாதிபதி ட்ரம்ப் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில், “எங்களுக்குத் தேவைப்பட்ட நேரத்தில் நேட்டோ அங்கிருக்கவில்லை; இனியும் தேவைப்படும் போது அவர்கள் இருக்கப்போவதில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, நேட்டோ உறுப்பு நாடான டென்மார்க்கின் கட்டுப்பாட்டில் உள்ள கிறீன்லாந்து (Greenland) தீவு குறித்த தனது பழைய நிலைப்பாட்டையும் அவர் மீள வலியுறுத்தியுள்ளார். கிறீன்லாந்தை “நிர்வாகச் சீர்கேடு அடைந்த ஒரு பனிக்கட்டி” என விமர்சித்துள்ள அவர், அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு இத்தீவு மிக முக்கியமானது என்பதையும் சூசகமாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானுடனான போர் மற்றும் உலகளாவிய எண்ணெய் விநியோகப் பாதுகாப்பு போன்ற விடயங்களில் ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவுக்கு ஒத்துழைக்கத் தவறினால், நேட்டோ அமைப்பிலிருந்து அமெரிக்கா வெளியேறக்கூடும் என்ற அச்சமும் தற்போதைய அரசியல் சூழலில் எழுந்துள்ளது.
இருப்பினும், நேட்டோ தலைவர் மார்க் ரூட்டே இந்தச் சந்திப்பை “நண்பர்களுக்கு இடையிலான வெளிப்படையான உரையாடல்” என வர்ணித்துள்ளார். ஈரானுடன் தற்போது எட்டப்பட்டுள்ள இருவார கால தற்காலிக போர்நிறுத்தம், இந்த முறுகல் நிலையைச் சற்றே தணிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More