47
சுகாதார நிபுணர்கள் கூறுவது:
பிரிட்டனின் வேல்ஸ் பகுதியைச் சேர்ந்த 42 வயதான லோரி டென்மன் என்ற பெண், இந்தியாவிற்கு மேற்கொண்ட மூன்று மாத பயணத்திற்குப் பிறகு அரிய வகை மூளைத் தொற்றால் பாதிக்கப்பட்ட சம்பவம் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
2007ஆம் ஆண்டு இந்தியா பயணித்த லோரி, உணவு நச்சுத்தன்மையைத் தவிர்க்க இறைச்சி உணவைத் தவிர்த்திருந்தாலும், மாசடைந்த உணவு அல்லது தண்ணீர் மூலம் பன்றி நாடாப்புழுவின் (Taenia solium) முட்டைகள் உடலுக்குள் சென்றிருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர்.
மூன்று ஆண்டுகள் கழித்து, கழிவறையைப் பயன்படுத்தியபோது சுமார் ஒரு மீட்டர் நீளமுள்ள நாடாப்புழுவைக் கண்டதும் அவர் முதன்முதலாக உடல்நிலை குறித்து சந்தேகித்தார். ஆரம்ப பரிசோதனைகளில் எந்த பாதிப்பும் தெரியவில்லை.
ஆனால் அதன்பின் கடுமையான தலைவலி, வலிப்பு மற்றும் மனக்குழப்பம் அதிகரித்ததால் மேற்கொள்ளப்பட்ட CT மற்றும் MRI பரிசோதனைகளில், அவரது மூளையில் 38 ஒட்டுண்ணிகள் இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இது ‘நியூரோசிஸ்டிசெர்கோசிஸ்’ (Neurocysticercosis) எனப்படும் அரிய பராசிட்டிக் நோயாக மருத்துவர்கள் கண்டறிந்தனர்.
இந்த நோய் பொதுவாக அசுத்தமான உணவு, தண்ணீர் அல்லது சுகாதாரமற்ற சூழலால் பரவக்கூடியது. பல ஆண்டுகள் சிகிச்சை, ஸ்டீராய்டுகள் மற்றும் ஒட்டுண்ணி எதிர்ப்பு மருந்துகள் மூலம் தற்போது லோரியின் உடல்நிலை மேம்பட்டுள்ளது. 2017க்குப் பிறகு அவருக்கு வலிப்பு ஏற்படவில்லை என்றாலும், வாழ்நாள் முழுவதும் மருந்து எடுத்துக்கொள்ள வேண்டிய நிலை தொடர்கிறது.
தனது கடுமையான அனுபவத்தை மற்றவர்களுக்கு எச்சரிக்கையாக மாற்ற வேண்டும் என்ற நோக்கில், லோரி தற்போது இந்த அரிய நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
பயணங்களின் போது குடிநீர், சுத்தமான உணவு மற்றும் தனிநபர் சுகாதாரத்தில் அதிக கவனம் செலுத்துவது இத்தகைய தொற்றுகளைத் தவிர்க்க உதவும்.
Spread the love

