வவுனியாவில் இன்று இடம்பெற்ற கோர விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், முச்சக்கரவண்டி சாரதி படுகாயமடைந்துள்ளார். தாண்டிக்குளம் புகையிரத நிலையத்திற்கு அண்மித்த பகுதியில், கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த கடுகதி புகையிரதத்துடன் தண்டவாளத்தை கடக்க முயன்ற முச்சக்கரவண்டி மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றது. பாதுகாப்பற்ற புகையிரத கடவையை பயன்படுத்திய போது இந்த அனர்த்தம் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் முச்சக்கரவண்டி கடுமையாக சேதமடைந்த நிலையில், அதில் பயணித்த பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதேவேளை, படுகாயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி வவுனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தாண்டிக்குளம் பகுதியில் இவ்வாறான விபத்துகள் அடிக்கடி இடம்பெறுகின்றன என்பதால், அந்த பாதுகாப்பற்ற புகையிரத கடவையை குறித்து பொதுமக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா காவல்துறையினா் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
#Vavuniya #Thandikulam #TrainAccident #RoadSafety #RailwayCrossing

