இலங்கை அஞ்சல் திணைக்களத்தினால் அமெரிக்க அஞ்சல் சேவைக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் பணத்தில் மேலும் 600,000 அமெரிக்க டொலர் காணாமல் போனமை தொடர்பாக விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோது அவர் இதனை குறிப்பிட்டார்.
அமெரிக்க அஞ்சல் சேவைக்கு வழங்க வேண்டிய கொடுப்பனவுகள் கிடைக்கவில்லை என்ற முறையீட்டைத் தொடர்ந்து இந்த விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்கு முன்னரே 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி மோசடி செய்யப்பட்டதாக குற்றச்சாட்டுகள் நிலவி வந்த நிலையில், தற்போது மேலும் 600,000 அமெரிக்க டொலரும் காணாமல் போனமை கண்டறியப்பட்டுள்ளது.
திறைசேரிக்குச் சொந்தமான இந்த பெருமளவிலான நிதி மோசடி தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் ஆரம்ப ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளது. இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் ஐந்து அதிகாரிகளுக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், இந்த மோசடிக்குப் பின்னால் உள்ள மற்ற நபர்கள் மற்றும் அதன் வலையமைப்பை கண்டறிய மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
#SriLanka #PostalService #FinancialFraud #Investigation #MissingFunds #USPostalService #GovernmentNews #CIDInvestigation

