Home இந்தியா  பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி வாகன விபத்தில் காலமானார்!

  பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி வாகன விபத்தில் காலமானார்!

by admin

 தென்னிந்தியத் திரையுலகின் முன்னணித் தயாரிப்பாளரும், ‘சூப்பர் குட் பிலிம்ஸ்’ நிறுவனத்தின் அதிபரும் நடிகர்கள் ஜித்தன் ரமேஷ் மற்றும் ஜீவா ஆகியோரின் தந்தையுமான ஆர்.பி. சௌத்ரி (72) இன்று காலமானார். ராஜஸ்தான் மாநிலத்தில் இடம்பெற்ற கோரமான வாகன விபத்தில் அவர் உயிரிழந்ததாகத் தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

தனது சொந்த மாநிலமான ராஜஸ்தானுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த ஆர்.பி. சௌத்ரி, இன்று மதியம் உதய்ப்பூர் அருகே காரில் சென்று கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளானார். கட்டுப்பாட்டை இழந்த வாகனம் விபத்துக்குள்ளானதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 1980-களின் இறுதியில் தனது திரைப் பயணத்தைத் தொடங்கிய அவர், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி எனப் பல மொழிகளில் 90-க்கும் மேற்பட்ட திரைப்படங்களைத் தயாரித்துள்ளார. பூவே உனக்காக, சூர்யவம்சம், துள்ளாத மனமும் துள்ளும், வானத்தைப் போல போன்ற குடும்பப் பாங்கான வெற்றித் திரைப்படங்களை வழங்கி தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத தயாரிப்பாளராகத் திகழ்ந்தார்.  இவரது நான்கு மகன்களில், ஜித்தன் ரமேஷ் மற்றும் ஜீவா ஆகியோர் தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகர்களாக விளங்குகின்றனர்.

அவரது திடீர் மறைவுச் செய்தி கேட்டு ஒட்டுமொத்தத் திரையுலகமும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த், “என் அருமை நண்பர் ஆர்.பி. சௌத்ரியின் மரணம் ஈடு செய்ய முடியாத இழப்பு” என இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், பல நடிகர்களும் இயக்குநர்களும் சமூக வலைதளங்கள் வாயிலாகத் தமது ஆழ்ந்த இரங்கல்களைப் பகிர்ந்து வருகின்றனர். அன்னாரது உடல் விசேட விமானம் மூலம் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு, பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

#ஆர்பிசௌத்ரி #மறைவு #சூப்பர்_குட்_பிலிம்ஸ் #நடிகர்ஜீவா #ஜித்தன்ரமேஷ் #தமிழ்_சினிமா #விபத்து #இரங்கல் #RPChoudary #RIPRPChoudary #SuperGoodFilms #ActorJiiva #KollywoodLoss

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More