Home இலங்கைவித்யா படுகொலை வழக்கு: நால்வரின் மரண தண்டனையை உறுதி செய்த உயர் நீதிமன்றம்

வித்யா படுகொலை வழக்கு: நால்வரின் மரண தண்டனையை உறுதி செய்த உயர் நீதிமன்றம்

by admin

 

கடந்த 2015-ஆம் ஆண்டு முழு இலங்கையையும் உலுக்கிய யாழ்ப்பாணம், புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்யா படுகொலை வழக்கு தொடர்பான இறுதித் தீர்ப்பை இலங்கை உயர் நீதிமன்றம் இன்று (2026 மே 06, புதன்கிழமை) அறிவித்துள்ளது. தமக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராகப் பிரதிவாதிகள் தாக்கல் செய்திருந்த அனைத்து மேன்முறையீட்டு மனுக்களையும் நிராகரித்த உயர் நீதிமன்றம், யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை உறுதி செய்துள்ளது.

 நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையிலான ஐவர் கொண்ட நீதியரசர்கள் குழாம் இந்த இறுதித் தீர்ப்பை வழங்கியது.  “சுவிஸ் குமார்” என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிகுமார் உள்ளிட்ட பிரதிவாதிகள், தமக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையிலிருந்து விடுவிக்கக் கோரித் தாக்கல் செய்த மனுக்கள் எவ்வித சட்டபூர்வ அடிப்படையும் அற்றவை எனக் கூறி நீதிமன்றம் அவற்றை நிராகரித்தது.

மாணவி வித்யா கடத்தப்பட்டு, கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு, மிகவும் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட குற்றத்திற்காக இவர்களுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட மரண தண்டனை சரியானது என நீதியரசர்கள் குழாம் ஏகமனதாக உத்தரவிட்டது.

கடந்த  2015-ஆம் ஆண்டு மே மாதம் யாழ்ப்பாணம், புங்குடுதீவில் பாடசாலைக்குச் சென்ற மாணவி வித்யா கடத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டார். 2017 செப்டம்பர் மாதம் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் நடைபெற்ற ‘ரயல் அட் பார்’ (Trial-at-Bar) விசாரணையின் முடிவில், சுவிஸ் குமார் உள்ளிட்ட ஏழு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. : இந்தத் தீர்ப்பை எதிர்த்துப் பிரதிவாதிகள் உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்தனர். நீண்டகால விசாரணைகளின் பின்னர், இன்று அந்த மேன்முறையீடுகள் தள்ளுபடி செய்யப்பட்டு நால்வருக்கான தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாணவி வித்யாவின் படுகொலை வழக்கு என்பது இலங்கையின் நீதித்துறை வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். குறிப்பாக, அறிவியல் ரீதியான தடயங்கள் மற்றும் டி.என்.ஏ (DNA) பரிசோதனைகளின் அடிப்படையில் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்ட விதம் பாராட்டுக்குரியது. இன்றைய உயர் நீதிமன்றத் தீர்ப்பானது, இத்தகைய கொடூரமான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு நீதித்துறை வழங்கும் ஒரு கடுமையான எச்சரிக்கையாகப் பார்க்கப்படுகிறது. 11 ஆண்டுகளுக்குப் பிறகு எட்டப்பட்டுள்ள இந்த இறுதித் தீர்ப்பு, பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்திற்கும், சமூகத்திற்கும் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட நீதியை வழங்கியுள்ளது.

#VidhyaJustice #SupremeCourtSL #SwissKumar  #JaffnaNews  #DeathPenaltyConfirmed

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More